தேசம் எங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளது: தோல்வியை ஒப்புக்கொண்டது காங்கிரஸ்

16-வது மக்களவை தேர்தல் 12 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 278 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தேர்தல் தோல்வியை காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது: "தேசம் எங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளது. இந்த தோல்வி மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது" என்றார்.

இதே போல் காங்கிரஸ் மூத்த தலைவர் சத்யவரத் சதுர்வேதி கூறுகையில், தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து எங்கே தவறு நடந்தது என்பதை கண்டறிந்து கட்சி மேம்படுத்தப்படும் என்றார்.

தேர்தல் தோல்வி குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில்: "தேர்தல் தோல்வி ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இந்த அளவு தோல்வி பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை. ஜனநாயக நாட்டில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று" என்றார்.

தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்பாரா என்ற கேள்விக்கு: தேர்தல் தோல்விக்கு கூட்டாக அனைவரும்தான் பொறுப்பேற்போம் என கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும் அதை சரியாக மக்கள் மத்தியில் எடுத்துரைக்க தவறி விட்டது. ஆனால் பாஜக சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை வழங்கியது அதை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE