விவேகம் மிகுந்தவர் மன்மோகன் சிங்: அருண் ஜேட்லி புகழாரம்

By செய்திப்பிரிவு

பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர் என புகழாரம் சூட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அவரால் சிறந்த தலைவராக செயல்பட முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், மன்மோகன் சிங்கின் தனித்திறன்களை பட்டியலிட்டுள்ள அருண் ஜேட்லி, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலம் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் மக்களவை எதிர்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி தனது வலைப்பதிவில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அனுபவப் பகிர்வு ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்:

"பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர். அவர் எந்தவொரு கருத்தையும் யோசிக்காமல் சொல்லமாட்டார். அவர் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மா ராவ், மன்மோகன் சிங்கிற்கு வழிகாட்டியாக இருந்தார். 1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மாற்றம் பெறத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். மன்மோகன் சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதியமைச்சராக பதவி வகித்தவர். அந்தக் காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன் சிங் பெற்றார்.

ஆனால், சோனியா காந்தியின் கீழ் மன்மோகன் சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. ஏன் என்றால், அவர் அறிவிக்கப்பட்ட பிரதமராகவே செயலாற்றினார். சோனியா காந்திக்கு பிரதாராகும் வாய்ப்பு இல்லாமல் போனதால், கணக்கில் வந்த தலைவராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது தலைமையிலிருந்து விதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே செயல்பட வேண்டியிருந்தது.

நான் கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளேன். அவருக்கான உரிய இடம் வழங்கப்படாமலே இருந்தது. நிச்சயம் வரலாறு டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவுகூரும். அவரது செயலாற்றல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியது.

அவர் பிரதமாரக அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து, அவரால் சிறந்த தலைவராக பணியாற்ற முடிந்ததில்லை. அதற்கான காரணங்கள் அனைவருக்கும் மிகவும் தெளிவானது. அதனால், அவரால் ஒரு நாட்டை முன்னிறுத்தும் நிலையான தலைவராக இருக்க முடியாமல் போனது.

மன்மோகன் சிங்கும், அவரது நிலையை தெரிந்தே செயலாற்றினார். அவருக்கான எல்லை எதுவரை, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு உரியது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

மன்மொகன் சிங் நற்குணங்களை கொண்ட மனிதர், எந்த ஒரு முக்கிய விவாகாரங்களாக இருந்தாலும், தீர ஆராய்ந்து அது குறித்து தெளிவான பார்வையோடு மட்டுமே பேசுவார். எதையும் எளிமையாக கையாளும் தன்மை கொண்டவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதில் நன்கு தேர்ந்தவராக அவர் திகழ்வார்.

அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. அது தேசிய ஆலோசனை கவுன்சிலின் முடிவால் அல்லது ராகுல் காந்தி அந்த கோப்புகளை கிழித்து எறிந்ததால், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அந்த சமயத்தில் பிரதமர் தனது தலைமை பொறுப்பிலிருந்து தவறிவிட்டார். தன் சுய கருத்தை தாண்டி தனது தலைமை எடுக்கும் முடிவை பின்பற்றுபவராக அவர் இருந்தார்.

அவரது இயலாமையே அவரை மக்களுக்காக செயல்பட முடியாமல் போக காரணாமாக அமைந்து விட்டது.

மன்மோகன் சிங்கின் இறுதி வார்த்தை என்று ஒன்று இருந்ததில்லை. அவரால் செயலாற்ற முடிந்திருந்தால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேட்டை தடுத்திருக்க முடியும், 2ஜி அலைக்கற்ற ஒதுக்கீட்டை நீதிமன்றம் அல்ல, அவரே நிராகரித்திருக்க முடியும். வரலாற்றில் மிகவும் வித்தியாசமான பிரதமராக அவர் வருணிக்கப்படுவார். அவரது கட்சிக்குள்ளேயே அவரால் பேச முடியாமல் போனது என்பது, மன்மோகன் சிங்கை வரலாற்றாசிரியர்களால் வேறுபட்ட கோணத்தில் பார்க்க வைக்கும்.

நாட்டை 10 ஆண்டுகாலம் வழிநடத்திய ஒரு தலைமை முடிவுக்கு வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார்" என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE