பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம்: மாயாவதி, மம்தா கட்சி அறிவிப்பு

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தரமாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.

வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி, ‘தேவைப்பட்டால் மத்தியில் ஆட்சி அமைக்க அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தேசியச்செயலர் மாயாவதி ஆகிய தலைவர்களின் ஆதரவைக் கோருவேன்’ என்று தெரிவித்திருந்தார். இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாயாவதி, ‘நரேந்திர மோடியோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு கொடுக்காது’ என திட்டவட்டமாக அறிவித்தார்.

‘தம்மால் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அந்த கட்சி புரிந்துகொண்டுவிட்டது, எங்களுக்கு ஆதரவு தரும் சிறுபான்மையினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான தந்திரம்தான் அவரது இந்த பேட்டியின் நோக்கம்’ என்றார் மாயாவதி.

திரிணமூல் காங்கிரஸ் நிலை:

‘மோடி தலைமையில் மத்தியில் ஆட்tசி அமைய பாஜக கதவு திறந்திருப்பதாக மோடி கூறியிருக்கிறார். ஆனால் எங்கள் கதவு மூடப்பட்டுவிட்டது. சாவியை தூக்கி எறிந்துவிட்டோம் என்பதே பாஜக பாணியில் நாங்கள் கூறும் பதில்’ என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரியன் கொல்கத்தாவில் தெரிவித்தார்.

மோடியின் பேட்டி தொடர்பாக தமிழக முதல்வர் தரப்பிலிருந்தோ அல்லது அவரது அதிமுக தரப்பிலிருந்தோ எந்த பதிலும் வரவில்லை.

முதல் தேர்வு காங்கிரஸ் கூட்டணி: டிஆர்எஸ்

தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தலைவர் கே. சந்திரசேகர ராவ் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆதரவு தரும் விஷயத்தில் அது தான் எங்கள் முதல் தேர்வு, அப்படியொரு நிலைமை ஏற்படாவிட்டால் 3ம் அணிக்கு ஆதரவு தருவதற்கான வாய்ப்பை பரிசீலிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தரமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE