சந்திரசேகர் ராவ் அரசியலிலிருந்து விலக வேண்டும்: விஜயசாந்தி

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என நடிகை விஜயசாந்தி ஆவேச மாகக் கூறினார்.

சமீபத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை விஜய சாந்தி, மேதக் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். வியாழக்கிழமை தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:

ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கினால் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக சந்திரசேகர் ராவ் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியை இணைக்க முடியாது என கூறிவிட்டார்.

கொடுத்த வாக்கை தவறுவது சந்திரசேகர் ராவிற்கு கைவந்த கலை. வாக்கு தவறிய அவர் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும். நான் மேதக் தொகுதி மக்களவை உறுப்பினராக பணியாற்றிய போது வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முற்பட்டபோது, சந்திர சேகர் ராவின் மருமகன் ஹரிஷ் ராவ் மற்றும் பத்மா தேவேந்தர் போன்றோர் அதைத் தடுத்து அந்த நிதியை முறை கேடாகப் பயன்படுத்தினர்.

தெலங்கானா மாநிலம் உருவாக சந்திர சேகர் ராவும் அவரது கட்சியும் எந்தத் தியாகமும் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிதான் தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியது. இவ்வாறு விஜயசாந்தி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE