யார் இந்த ஹவாலா அப்ரோஸ்?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நிலமோசடி புகார்கள் குறித்து பாஜக அண்மையில் சி.டி. வெளியிட்டது.

இதற்குப் பதிலடியாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஹவாலா தரகர் அப்ரோஸுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதற்கு ஆதாரமாக அப்ரோ ஸுடன் மோடி இருக்கும் புகைப்படத் தொகுப்பு அடங்கிய சி.டி.யை காங்கிரஸ் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளரும் கிரிக்கெட் வீரருமான முகமது அசாருதீனுடன் அப்ரோஸ் இருக்கும் சி.டி.யை பாஜக வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே சி.டி. யுத்தம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் நேரத்தில் இதற்கு காரணமான ஹவாலா மோசடி மன்னன் அப்ரோஸ் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

வைர வியாபாரி

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி அப்ரோஸ் ஹசன் பட்டா. சந்தேகத்தின்பேரில் இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1000 கோடி அளவுக்கு ஹவாலா பண மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த வகையில் சுமார் ரூ.1000 கோடி முதல் ரூ.5000 கோடி வரை ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நிழல்உலக தொடர்பு

அப்ரோஸுக்கும் நிழல்உலக தாதா சோட்டா ஷகீலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் என்று போலீஸார் கூறுகின்றனர்.

அப்ரோஸ் வீட்டில் இருந்து ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் 6 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்துள்ளன.

சோட்டா ஷகீலை எதிர்க்கும் நிழல்உலக தாதாக்கள் இதுபோல் தோட்டாக்களை பார்சலில் அனுப்பி அப்ரோஸை மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தன்னிடம் ரூ.150 கோடி பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டுவதாக அப்ரோஸே போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அப்ரோஸ் என்று நினைத்து ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டதாக சூரத் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதச் சம்பவங்களில் அப்ரோஸ் போன்ற வைர வியாபாரிகள் மூலம் பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்தும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE