ரூ.1.8 கோடிக்கு விற்ற மம்தாவின் ஓவியம்: மோடி பேச்சால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியின் ஓவிய விற்பனை தொடர்பான சர்ச்சை, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர் மோடியின் பேச்சால் மீண்டும் எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பிரபல சீட்டு நிறுவனமான சாரதா குரூப் நிறுவனத்தின் தலைவர் சுகிப்தா சென். பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இவர் கடந்த நவம்பர் 23-ல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். நிதி மோசடி குறித்து நீதிபதி ஷியாமல் சிங் தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. சுகிப்தா சென்னின் பலகோடி ரூபாய் மோசடியில் மம்தா அரசுக்கும் பங்கு இருப்பதாக ஒரு புகார் உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம், ராம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி, “மம்தாவின் ஓவியங்கள் வழக்கமாக ரூ.4 லட்சம், 8 லட்சம் அல்லது 15 லட்சங்கள் வரைதான் விற்பனையாகின்றன. ஆனால், ஒரே ஒரு ஓவியம் மட்டும் ரூ.1.8 கோடிக்கு விற்றதன் காரணம் என்ன? இவ்வளவு தொகை கொடுத்து இந்த ஓவியத்தை வாங்கியது யார்? திடீரென உங்கள் திறனை அவர்கள் கண்டறிந்தது எப்படி?” எனக் கேள்வி எழுப்பினார்.

மோடியின் இந்தப் பேச்சை தொடர்ந்து சுகிப்தா சென்தான் மம்தாவின் ஓவியத்தை ரூ.1.8 கோடிக்கு வாங்கியவர் என பேச்சு எழுந்தது.

இந்நிலையில் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மம்தா, ஓவியம் கோடிகளில் விலை போனதை மறுத்ததுடன், மோடியை ‘பேய்’ என கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், வங்காளிகள், வங்காளி அல்லாதவர்கள் இடையே மோடி பிரிவினையை தூண்ட முயல்வதாக குற்றம் சாட்டினார்.

இத்துடன், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மோடி மீது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிபதி ஷியாமல் சிங் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரான சுதிப்தா சென், “எந்தவொரு ஓவியத்தையும் நான் வாங்கவில்லை. அதற்காக யாருக்கும் பணமும் கொடுக்கவில்லை” என்றார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினரான குணால் கோஷ், சாரதா நிறுவன சீட்டு மோசடி குற்றவாளிகளை காப்பாற்ற மம்தா அரசு முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். குணால் கோஷ் திரிணமூல் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர். இவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ஓவியங்கள் பிரச்சனையில் சுதிப்தா சென் தன் பேச்சை மாற்றுகிறார். தற்போது தேர்தலில் பிரச்சனையாகிவிட்ட பின் எனக்கு சுதிப்தாவை சிறையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் என்னிடம் கூறியது வேறு” என்றார்.

2 ஆண்டில் ரூ.6.47 கோடி

கடந்த 2 ஆண்டுகளில் மம்தாவின் ஓவிய விற்பனை மூலம் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.6.47 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இதில் 2010-11-ல் ரூ.3.94 கோடியும், 2012-13-ல் ரூ.2.53 கோடியும் கிடைத்ததாக இக்கட்சி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த வருமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்