கல்லூரிகளில் முக்கிய இளங்கலை படிப்புகளில் சேர குவியும் மாணவர்கள் - சிக்கல் என்ன?

By என். சன்னாசி

மதுரை: கல்லூரிகளில் பி.காம், பி.ஏ, பி.எஸ்சி போன்ற இளங்கலைப் படிப்புகளில் சேர மாணவர்கள் குவிந்து வருகின்றனர். அரசு கல்லூரிகளில் ஏழை மாணவர்களும் இடம் கிடைக்க இயலாத நிலை உள்ளது.

மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 40 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் இயங்குகின்றன. அரசு நிர்ணயித்த மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இன சுழற்சி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு கலை பாடப் பிரிவிலும் தலா 50 - 60 பேரும், அறிவியல் பிரிவில் 45 - 50 மாணவ, மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். தனியார் சுயநிதிப்பிரிவுகளில் சற்று கூடுதலாக சேர்க்கின்றனர்.

இந்நிலையில், மதுரை தியாராசர், அமெரிக்கன், வக்போர்டு, எஸ்என்என், எஸ்விஎன், சமூக அறிவியல் கல்லூரிகள் மற்றும் லேடிடோக், பாத்திமா போன்ற மகளிர் கல்லூரிகளிலும் அட்மிஷன் முடியும் நிலைக்கு வந்துள்ளது. மதுரை மீனாட்சி மகளிர், மேலூர் அரசு இருபாலர் கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீடு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. பிற மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை தொடர்ந்து நடக்கிறது. பெரும்பாலும் ஒவ்வொரு கல்லூரியிலும் பி.காம், பி.ஏ ஆங்கிலம், தமிழ் இலக்கியம், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி., ஐடி போன்ற முக்கிய பாடப்பிரிவுகளுக்கு 3 அல்லது 4 மடங்கு பேர் விண்ணப்பித்துள்ளனர்.

குறிப்பாக மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் 1230 இடங்களுக்கு 12,026 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்ப் பாடத்திற்கென 3069 விண்ணப்பமும், பிகாம் பாடத்திற்கு 2334 படிவங்களும், வேதியியல் பாடபத்திற்கு 2500, 25 சீட் கொண்ட கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் சேர 2400 மாணவிகள் விண்ணப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது போன்ற சூழலில் தமிழ், ஆங்கில பாடங்களில் 80 முதல் 90 மதிப்பெண்களும், அறிவியல் பாடப்பிரிவுகளில் 350-380க்கும் மேல் ( 4 பாடங்களில்) மதிப்பெண்களும் வாங்கியவர்களுக்கே பெரும்பாலும் சீட் வழங்கப்படுகிறது. ஆனாலும், முக்கிய கல்லூரிகளுக்கு பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் சென்று அரசு ஒதுக்கீட்டில் சீட் கேட்டு தினமும் குவிக்கின்றனர். கல்லூரி, முதல்வர் நிர்வாக அதிகாரிகளை சந்தித்து வாய்ப்பு குறித்த தகவல்களை கேட்கின்றனர்.

கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில், ''மதுரை மண்டலத்தை பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் குறைவு என்றாலும், ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் அதிகரிக்கின்றன. அரசு ஒதுக்கீட்டில் பிகாம் உள்ளிட்ட விரும்பும் முக்கிய பாடப் பிரிவுகளில் வாய்ப்பளிக்க முடியாத சூழல் உள்ளது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அட்மிஷன் கிடைக்கிறது.

மதுரை நகரை பொறுத்தவரை இருபாலர் அரசு கல்லூரி ஒன்று இருந்தால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவர். சுயநிதி பிரிவில் விரும்பிய பாடங்களை படிக்க, ஏழை மாணவர்களால் இயலவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் சிபாரிசு கடிதம் கொடுத்தாலும் மதிப்பெண்களுகே வாய்ப்பளிக்கப்படுகிறது. வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி சுயநிதி பிரிவு ஏழை மாணவர்கள் சேர்கின்றனர். சிலரால் தொடர்ந்து கட்டணம் செலுத்த முடியாமல் பாதியில் நிற்கும் நிலை ஏற்படுகிறது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE