விழிப்புணர்வு தரும் சக்தி!

By எல்.ரேணுகா தேவி

 

ல்லா வசதி வாய்ப்புகளும் இருந்து சாதிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், வாய்ப்பு வசதிகள் என்றால் என்ன என்றே தெரியாத சமூகச் சூழலில் இருந்து வருபவர் சக்தி. நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சக்தி இன்று சர்வதேச அளவில் வழங்கப்படும் குழந்தைகளுக்கான அமைதி பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு முன்பாக இந்த விருது, கல்விக்காகப் பாடுபட்டு வரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலாவுக்குக் கடந்த 2014-ல் வழங்கப்பட்டது. இவ்வாண்டு இந்த விருதுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 169 குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் ஒன்பது பேர் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்தியும் ஒருவர். இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களில் குறைந்த வயதுடையவர் அவர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் அளவுக்குச் சக்தி என்ன செய்திருப்பார்? தனக்குக் கிடைத்த கல்வியைப் பெரிய சாதனையாகப் பார்க்கும் சக்தி, தன்னைப் போலவே மற்ற நரிக்குறவர் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 25 நரிக்குறவர் குழந்தைகளிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் பள்ளிக்குச் செல்லத் துணையாக இருந்துள்ளார். சக்தியின் இந்த முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘ஹாண்ட் இன் ஹாண்ட்’ அமைப்பினர் அவரை சர்வதேசக் குழந்தைகளுக்கான அமைதிப் பரிசு பட்டியலுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

Sakthi profile (1)இடைநிற்றல்

திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சக்தி ஆசிரியரின் கண்டிப்புக்குப் பயந்து பள்ளியில் இருந்து இடைநின்றார். பின்பு பெற்றோருடன் சேர்ந்து கோயில் விழாக்களில் பலூன், பாசி மணி விற்பனைசெய்து குடும்பத்துக்கான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறார்.

“குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களை அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் நாங்கள் நடத்திவருகின்ற ‘பூங்காவனம்’ உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்துக் கல்வி வழங்கிவருகிறோம். அதன் அடிப்படையில்தான் சக்தி, கோயில் திருவிழாக்களில் பலூன் விற்பனை செய்வதைப் பார்த்தபோது, அவரை எங்கள் அமைப்பினர் மீட்டார்கள். இரண்டு வருடம் எங்களுடைய பள்ளியில் சக்தி படித்தபோது அவருக்கு யோகா, தியானம், விளையாட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தோம். இலவச உடை, புத்தகப் பை ஆகியவற்றைக் கொடுத்து எப்படி எளிமையாகப் படிப்பது என்பதையும் கற்றுக்கொடுத்தோம். புரியாத பாடங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அளவுக்குச் சக்தியிடம் முன்னேற்றம் தெரிந்தது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திலகர் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு சேர்த்து, அங்குள்ள மாணவர்களுக்கான அரசு விடுதியில் தங்கிப் படித்துவருகிறார் சக்தி” என்கிறார் ‘ஹாண்ட் இன் ஹாண்ட்’ அமைப்பைச் சேர்ந்த தீபா லட்சுமி.

தன்னைப் போல் பிறரும்

பூங்காவனம் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே சக்தி ஒவ்வொரு பண்டிகை கால விடுமுறைக்குத் தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது சக்தியின் உடை, பேச்சு, தோற்றம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அங்குள்ள குழந்தைகள் கவனித்திருக்கிறார்கள். “நான் ஊருக்குச் போகும்போதெல்லாம் கிராமத்தில இருக்க மத்த பசங்க என்னிடம், ‘எப்படிடா நீ மட்டும் நல்ல சட்டை, செருப்பு எல்லாம் போட்டுகிட்டு இருக்கிற’னு கேட்பாங்க. அப்போ அவங்ககிட்ட நீங்களும் என்னைப் போல ஸ்கூலுக்குப் போய் நல்ல படிச்சா உங்களுக்கும் சட்டை எல்லாம் கிடைக்கும். எல்லாரும் ஜாலியா இருக்கலாம், நல்ல படிச்சாதான் பெரிய ஆளாக முடியும்னு சொல்லுவேன். அப்படித்தான் எங்க கிராமத்துல இருக்கிற 25 பசங்க எல்லார்கிட்டையும் பேசி என்னோட ஸ்கூலுக்குப் போக வெச்சேன்” எனப் புன்னகையுடன் சொல்கிறார் சக்தி.

தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தான் மட்டும் முன்னேறுவதோடு நின்றுவிடவில்லை சக்தி. தன்னைப் போல இருக்கும் மற்ற நரிக்குறவக் குழந்தைகளிடமும் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முன்வந்தார். “தன்னுடைய சொந்த முயற்சியால் இதுவரை 25 மாணவர்களுக்குக் கல்வி கிடைக்க வழிவகை செய்துள்ளார். அவருடைய இந்த முயற்சி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதால்தான் சர்வதேசக் குழந்தைகளுக்கான பரிசுக்குப் பரிந்துரைசெய்துள்ளோம். எங்களின் பரிந்துரையும் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது” என்கிறார் தீபாலட்சுமி.

புதிய தலைமுறையை நோக்கி

தற்போது ஏழாம் வகுப்பு படித்துவரும் சக்தி வகுப்பில் எடுக்கும் பாடங்களை உன்னிப்பாகக் கவனித்துச் சிறப்பாகப் படித்து வருகிறார். “டீச்சர் எடுக்கும் கணக்கு, ஆங்கிலப் பாடங்கள் எனக்குப் புரியவில்லை என்றால் அதைக் கதைபோல் சொல்லித் தருவார்கள். அதனால், எனக்குச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது”என்கிறார். எதிர்காலத்தில் என்னவாக ஆசை என்று கேட்டதற்கு, “நல்லா படிச்சு கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆகணுங்குறது என்னோட ஆசை. எங்களுடைய சமூகத்துல ஊர் ஊரா போய்ப் பிழைப்பு நடத்துறதுதான் வழக்கம். ஆனால், எங்க அம்மா, அப்பாவை ஒரே இடத்தில் உட்கார வைச்சு சாப்பாடு போடணும், அவங்களை கார்ல அழச்சிட்டு போகணும்னு ஆசைப்படுறேன்” என்கிறார் சக்தி.

தலைமுறை தலைமுறையாகப் படித்துவரும் குழந்தைகளுக்கும் முதல் தலைமுறையாகப் பள்ளியில் அடியெடுத்துவைக்கும் குழந்தைகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அந்த வகையில், வாய்ப்பு மறுக்கப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த சக்தி போன்ற குழந்தைக்கு அளிக்கப்படும் கல்வி அவருக்கு மட்டுமல்ல; ஒரு புதிய தலைமுறையைச் சென்றடைந்திருக்கும் சமூக நீதி. நெடுங்காலமாக மறுக்கப்பட்ட சமூக நீதி இறுதியாகத் தனக்குக் கிடைத்த பிறகு அதன் மூலமாகத் தான் மட்டும் முன்னேறாமல் இந்த வளரிளம் பருவத்திலேயே அதைத் தன்னுடைய சமூகத்துக்கு எடுத்துசெல்லத் தொடங்கியிருக்கும் சக்தி வியக்கவைக்கிறார். விழிப்புணர்வின் சக்தி என்ன என்பதை நிரூபித்திருக்கும் சக்தி விருது பரிசீலனைக்குத் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

3 hours ago

கல்வி

7 hours ago

கல்வி

7 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

மேலும்