பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் | 90.93 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி: திருப்பூர் முதல் இடம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய 7.77 லட்சம் மாணவ, மாணவிகளில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சியில் 96.38 சதவீதத்துடன் திருப்பூர் முதல் இடம் பெற்றுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்.5-ம்தேதி வரை நடந்தது. தேர்வு எழுத தமிழகம், புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88,064 மாணவ, மாணவிகள் பதிவு செய்தனர். அதில் 7 லட்சத்து 76,844 பேர் தேர்வில் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களால் 11,220 பேர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வுத் துறை இணையதளத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றுமதியம் 2 மணிக்கு வெளியிடப்பட்டன. மாணவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

பிளஸ் 1 பொதுத் தேர்வில்7 லட்சத்து 6,413 (90.93%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2022-ம் ஆண்டைவிட 0.86 சதவீதம் அதிகம். இதில் மாணவிகள் 94.36 சதவீதம் பேரும், மாணவர்கள் 86.99 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 7.37% சதவீதம் முன்னிலையில் உள்ளனர்.

இத்தேர்வில் 162 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 1,792 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2,605 ஆக இருந்தது. மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த பள்ளிகள் தேர்ச்சியில் திருப்பூர் (96.38%) முதல் இடம் பெற்றுள்ளது. ஈரோடு (96.18%), கோவை (95.73%) அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் ராணிப்பேட்டை (81.18%) உள்ளது. அரசுப் பள்ளிகள் தேர்ச்சி பிரிவில் திருப்பூர் (94.33%) முதல் இடத்திலும், மயிலாடுதுறை (71%) கடைசி இடத்திலும் உள்ளன.

பள்ளிவாரியான தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளன. தனியார் பள்ளிகள் 97.69%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.20%, அரசுப் பள்ளிகள் 84.97% தேர்ச்சி பெற்றுள்ளன. பாடப்பிரிவு வாரியான தேர்ச்சியில் அறிவியல் (93.38%), தொழிற்பிரிவு (81.6%), வணிகவியல் (88.08%), கலை (73.59%) என தேர்ச்சி விகிதம் உள்ளது.

நூற்றுக்கு நூறு: பிளஸ் 1 தேர்வில் முந்தைய ஆண்டுகளைவிட ‘நூற்றுக்கு நூறு’(சென்டம்) பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். அடுத்ததாக கணினி அறிவியல் 940, கணினி பயன்பாடு 598, இயற்பியல் 440, வணிகவியல் 214, வணிகக் கணிதம் 132, வேதியியல் 107, உயிரியல் 65, பொருளியல் 40, விலங்கியல் 34, கணிதம் 17, ஆங்கிலம் 12, தமிழ் 9, தாவரவியலில் 2 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு திறன்கள் பாடத்தில் 115 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாற்றுத் திறன் மாணவர்கள் 5,709 பேர் தேர்வு எழுதியதில், 5,080 பேர் (88.98%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 125 சிறை கைதிகள் தேர்வு எழுதியதில், 108 பேர் (86.4%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் எந்த நிபந்தனையும் இன்றி வரும் ஆண்டில் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம். அவர்கள் அடுத்து வரும் சிறப்பு தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE