எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி: 3,718 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9.14 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவிகளே இந்த ஆண்டும் தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் 4,025 தேர்வு மையங்களில் கடந்த ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத தமிழகம், புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38,291 மாணவ, மாணவிகள் பதிவு செய்தனர். அவர்களில் 9 லட்சத்து 14,320 பேர் தேர்வை எழுதினர். இடைநிற்றல் உட்பட பல்வேறு காரணங்களால் 23,971 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

மாநிலம் முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24-ம் தேதி தொடங்கி மே 3-ம் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்டஇதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன.

இதற்கிடையே, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், தேதி மாற்றப்பட்டு, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுடன் இணைத்து மே 19-ம்தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்தது.

அதன்படி, தேர்வு துறை இயக்குநரகத்தின் இணையதளத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 8 லட்சத்து 35,614 (91.39%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுகடந்த ஆண்டைவிட 1.32 சதவீதம் அதிகம். மாணவிகள் 94.66 சதவீதமும், மாணவர்கள் 88.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 6.5 சதவீதம் அதிகம். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து மாணவிகளே முன்னிலையில் உள்ளனர்.

மாற்றுத் திறன் மாணவர்கள் 10,808 பேர் தேர்வு எழுதிய நிலையில், 9,703 பேர் (89.77%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 264 சிறை கைதிகள் தேர்வு எழுதியதில் 112 பேர் (42.42%) மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை (53%) விட 10 சதவீதம் குறைவு.

தேர்வில் 1,026 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 3,718 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 4,006 ஆக இருந்தது. மாவட்ட அளவிலான தேர்ச்சியில் பெரம்பலூர் (97.67%) முதல் இடம் பெற்றுள்ளது. சிவகங்கை (97.53%), விருதுநகர் (96.22%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடைசியில் ராணிப்பேட்டை (83.54%) உள்ளது. அரசுப் பள்ளிகள் பிரிவில் சிவகங்கை (96.38%) மாவட்டம் முதல்இடத்திலும், மயிலாடுதுறை (78.28%) கடைசி இடத்திலும் உள்ளன.

தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 26-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE