10ம் வகுப்பு தேர்வில் 437 மதிப்பெண்கள் - இரண்டு கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு முதல்வர் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மாவின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்!

அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்" என்று பதவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக முதலவ்வர் மு.க. ஸ்டாலின் இன்று (19.5.2023) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவரது தாயாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, அம்மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE