பிளஸ் 1 முடிவுகள் | அரசுப் பள்ளிகளில் 84.97% தேர்ச்சி; 162 பள்ளிகள் 100% தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் 84.97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 162 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழகத்தில் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன. மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 7,549 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.97 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.20 சதவீதம், தனியார் பள்ளிகள் 97.69 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதைத் தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 91.19 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 81.88 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.29 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 1,792 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 162.

இதனிடையே, 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை வரும் மே 26-ம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE