சென்னை ஐஐடியில் நீர்வள மேலாண்மை கூட்டு ஆராய்ச்சி: இஸ்ரேல்-இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடியில் நீர்வள மேலாண்மை மற்றும் நீர் தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி தொடர்பாக இஸ்ரேல்-இந்தியா இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் அரசும், இந்திய அரசும் இணைந்து சென்னை ஐஐடியில் இந்திய-இஸ்ரேல் நீர் ஆதார மேலாண்மை மற்றும் நீர் தொழில்நுட்ப மையத்தை நிறுவுகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் கடந்த 9-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் எலிகோகன், ஐஐடி பேராசிரியர்டி.பிரதீப் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக இணைச் செயலர் மனோஜ் ஜோஷி, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிளியோன், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை ஐஐடி வளாகத்தில் நீர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க இஸ்ரேல் சர்வதேச கூட்டுறவு மேம்பாட்டு முகமையுடன் இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இணைந்து செயல்படும்.

இந்நிகழ்வில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, “இந்த புதிய முயற்சி, தண்ணீர் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான மிக முக்கியமான கூட்டு முயற்சிகளில் ஒன்றாக ஐஐடி கருதுகிறது. இரு நாட்டு நீர் நிபுணர்களும் கூட்டு சேர்ந்து நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்வர்” என்று குறிப்பிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE