சென்னை: பிளஸ் 2 தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கான உடனடி துணை தேர்வு ஜூன் 19-ம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு வாழ்த்துகள். வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். வெற்றி வாய்ப்பை இழந்தது, மதிப்பெண் குறைந்ததற்காக பெற்றோரும் பிள்ளைகளை திட்டக்கூடாது. தேர்ச்சி பெறாதவர்கள், குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் ஆலோசனை பெற ‘14417’ என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணை தேர்வு ஜூன் 19-ம் தேதி முதல் நடைபெறும். இந்தவாய்ப்பை பயன்படுத்தி, மாணவர்கள் துணை தேர்வில் வெற்றி பெற்றால், இந்த ஆண்டிலேயே உயர்கல்வியை தொடர முடியும். பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்களை கண்டறிந்து துணை தேர்வில் பங்கேற்கவைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை விளம்பர பதாகைகளில் வெளியிடுவதற்கு, அவர்களது பெற்றோரிடம் தனியார் பள்ளிகள் ஒப்புதல் பெறவேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு ஆலோசனை வழங்க, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வழிகாட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி படிப்புகள், கல்லூரிகளில் சேரும்வழிமுறைகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்கும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான்சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. எங்களை தேடி வருபவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவோம் என்றார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்திருந்தது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலக அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
ஆனால், விமானப் பயணத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அமைச்சர் அன்பில்மகேஸ் 10 மணிக்குதான் அங்கு வந்து சேர்ந்தார். வந்ததும், தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தொடர்ந்து இணையதளத்திலும் முடிவுகள் வெளியிடப்பட்டன. முடிவுகள் வெளியாக அரை மணி நேரம் தாமதமானது, மாணவர்கள், பெற்றோரிடம் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.
வனத்துறை பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதன்படி, ஒட்டுமொத்த தேர்ச்சியில் அரசு பள்ளிகள் 89.80 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99 சதவீதமும், தனியார் பள்ளிகள் 99.08 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் சுயநிதி பள்ளிகளே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன.
அரசுத்துறை சார்ந்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதப்படி, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் 86.16 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 90.08 சதவீதமும், வனத்துறை பள்ளிகள் 94.87 சதவீதமும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 94.82 சதவீதமும், நகராட்சி பள்ளிகள் 90.54 சதவீதமும், சமூகநலத்துறை பள்ளிகள் 91.44 சதவீதமும், பழங்குடியினர் நல பள்ளிகள் 94.82 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. அரசு துறை பள்ளிகளில் வனத்துறை பள்ளிகள்தான் தேர்ச்சியில் முதலிடத்தில் (94.87 சதவீதம்) உள்ளன.
326 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி: பிளஸ் 2 தேர்வில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. பிளஸ் 2 தேர்வை 7,533 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எழுதினர். இதில் அனைத்து வகை பள்ளிகளும் அடங்கும். இவற்றில் 2,767 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல, 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம்: அரசுப் பள்ளிகள் - 89.80 %, அரசு உதவி பெறும் பள்ளிகள் - 95.99 %, தனியார் சுயநிதி பள்ளிகள் - 99.08 %, இருபாலர் பள்ளிகள் - 94.39 %, பெண்கள் பள்ளிகள் - 96.04 %, ஆண்கள் பள்ளிகள் - 87.79 % தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழில் 2, வேதியியலில் 3,909, கணிதத்தில் 690 பேர் சென்டம்: பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தமிழ் - 2, ஆங்கிலம் -15, இயற்பியல் - 812, வேதியியல் - 3,909, உயிரியல் - 1,494, கணிதம் - 690, தாவரவியல் - 340, விலங்கியல் - 154, கணக்குப் பதிவியல் - 6,573, கணினி அறிவியல் - 4,618, வணிகவியல் - 5,678, பொருளாதாரம் - 1,760, கணினி பயன்பாடுகள் - 4,051, வணிகம் கணிதம், புள்ளியியல் - 1,334. முக்கியப் பாடங்கள் உட்பட வெவ்வேறு பாடங்களில் மொத்தம் 32,501 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 23,957 பேர் மட்டுமே 100-க்கு 100 பெற்றிருந்தனர்.
மீண்டும் முதலிடம் பிடித்த விருதுநகர்: பொதுத் தேர்வு தேர்ச்சிக்கான மாவட்ட தரவரிசையில் கடந்த 2001 முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக விருதுநகர் முதலிடத்தில் கோலோச்சியது. அதன்பிறகு தேர்ச்சியில் சரிந்த விருதுநகர் 2019-ல் 7-வது இடத்துக்கு பின்தங்கியது. பின்னர், தொடர் முயற்சியால் படிப்படியாக தேர்ச்சி விகிதம் உயர்ந்து, கடந்த ஆண்டு 2-ம் இடத்துக்கு விருதுநகர் முன்னேறியது. இந்த ஆண்டு 97.85 சதவீதத்துடன் மீண்டும் விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago