பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி - திண்டுக்கல் மாணவி 600-க்கு 600 பெற்று வரலாற்று சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை/ திண்டுக்கல்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் சதமடித்து 600-க்கு 600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு 3,324 மையங்களில் மார்ச் 13 முதல் ஏப்.3-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத தமிழகம், புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51,303 பள்ளி மாணவ, மாணவிகள் பதிவு செய்தனர். அவர்களில் 8 லட்சத்து 3,385 பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று காலை 10.07 மணிக்கு வெளியிட்டார். தேர்வுத் துறை இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 55,451(94.03%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் அதிகம். மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 4.93 சதவீதம் அதிகம். கடந்த 2013-ம் ஆண்டு முதல் தேர்ச்சி விகிதத்தில், மாணவிகளே முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த ஆண்டும் அந்த சாதனை தொடர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாணவிக்கு பாராட்டு: திண்டுக்கல்லில் உள்ள அரசு உதவிபெறும் அண்ணாமலையார் மில்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவிஎஸ்.நந்தினி. இவர் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப் பதிவியல் (அக்கவுன்டன்சி), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 என மொத்தம் 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை சரவணக்குமார், தச்சு தொழிலாளி. தாய் பானுப்பிரியா, தம்பி பிரவீன்.

மாணவி எஸ்.நந்தினி கூறியபோது, ‘‘தமிழை பாடமாக படிக்காமல், தாய்மொழி என்ற உணர்வோடு படிக்க வேண்டும் என்று தமிழ் ஆசிரியை அனுராதா சொல்லிக் கொடுத்தார். நான் கேட்கும் சந்தேகங்களுக்கு அனைத்து பாட ஆசிரியர்களும் பதில் அளித்து புரியவைத்தனர். இதனால்தான் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 பெற முடிந்தது. நான் டியூஷன் செல்லவில்லை. படிப்புதான் நமக்கு சொத்து என்று சொல்லி பெற்றோர் வளர்த்தனர். ஆடிட்டர் ஆகவேண்டும் என்பது என் குறிக்கோள்’’ என்றார்.

மாணவி நந்தினியை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் அழைத்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.

அரசுப் பள்ளிகள் சாதனை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 4,398 மாற்றுத் திறன் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 3,923 (89.20%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 90 கைதிகளில் 79 பேர் (87.78%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

326 அரசுப் பள்ளிகள் உட்பட 2,767 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. 2022-ல் இந்த எண்ணிக்கை 2,628 ஆக இருந்தது. மாவட்ட அளவிலான தேர்ச்சியில் 97.85சதவீதத்துடன் விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் (97.79%), பெரம்பலூர் (97.59%) அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் ராணிப்பேட்டை (87.30%) உள்ளது. அரசுப் பள்ளிகள் பிரிவில் திருப்பூர் (96.45%) முதலிடமும், மயிலாடுதுறை (82.82%) கடைசி இடத்திலும் உள்ளன.

இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தற்காலிக மதிப்பெண் பட்டியல்மே 12-ல் வெளியாகும். அசல் மதிப்பெண் சான்று விநியோகம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE