இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இளநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்க உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலைப் பொறியியல் (பி.இ.) படிப்புகளுக்கு சுமார் 1.50 லட்சம் அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான சேர்க்கை கலந்தாய்வு 2018-ம் ஆண்டு முதல் இணையவழியில் நடத்தப்படுகிறது. இந்தக் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணையை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை கிண்டியில் உள்ளதொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் இளநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. மாணவ,மாணவிகள் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக இதர பிரிவினர் (ஓ.சி.) பிற்படுத்தபட்டோர் (பி.சி.) பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை (பி.சி.எம்.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) ரூ.500-ம், பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.) பட்டியல் இனத்தவர் அருந்ததியினர்(எஸ்.சி.ஏ.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.) ரூ.250-ம் இணையவழியில் செலுத்த வேண்டும். இணைய வசதி இல்லாதவர்கள், வரைவோலை மூலமாக கட்டணம் செலுத்தலாம். அசல் சான்றிழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசம் ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஜூன் 7-ல் ரேண்டம் எண்: மாணவர்களின் சமவாய்ப்பு (ரேண்டம்) எண் ஜூன் 7-ம் தேதி வெளியாகும். சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 12-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். தரவரிசைப் பட்டியல் ஜூலை 12-ம் தேதி வெளியிடப்படும்.

அதில் தவறுகள் ஏதும் இருந்தால், அது தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். இந்தக் குறைபாடுகள் ஜூலை 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும். அதன் பின்னர் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதிமுதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும். இதில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையும், பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரையும் நடத்தப்படும்.

பின்னர், துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 26-ம் தேதி முதல் 29-ம்தேதி வரையும், எஸ்.சி. காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 1, 2, 3-ம் தேதிகளிலும் நடைபெறும். இணைய வசதி இல்லாதவர்கள் மாநிலம் முழுவதும் 110 பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புசேவை மையங்கள் வாயிலாகவிண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போதே, சான்றிதழ் சரிபார்ப்புக்கான சேவை மையத்தை தேர்வு செய்ய வேண்டும்‌. ஏனெனில், ஆவணங்களை இணையவழியில் சரிபார்க்கும்போது ஏதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌, சம்பந்தபட்ட மாணவர் சேவை மையத்துக்கே நேரடியாக வந்து, அதைசரி செய்துகொள்ள வேண்டும். எனவே, விண்ணப்பப் பதிவின்போது மாணவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ மட்டும் நேரடியாக நடைபெறும்‌. இந்த நடைமுறைகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-2235 1014/1015 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புகொண்டு, தக்க விளக்கங்களைப் பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

17,000 பேர் விண்ணப்பம்: பொறியியல் கலந்தாய்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்-ஆஃப் வெளியீடு: பொறியியல் கல்லூரிகளின் 5 ஆண்டுகளுக்கான (2018 முதல் 2022-ம் ஆண்டு வரை) கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுடன் இதை ஒப்பிட்டு, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.

முந்தைய ஆண்டுகளில் பொறியியல் கலந்தாய்வில் கல்லூரிகளை உறுதி செய்துவிட்டு, பின்னர் மருத்துவப் படிப்புகளுக்கு சென்றுவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 2021-ல் 14,183 பேர் வேறு படிப்புகளுக்குச் சென்ற நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 7,548-ஆக குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்