அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மே 8-ம் தேதி முதல் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, 2022-23 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் வாயிலாக நடத்த திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. தற்போது கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கலந்தாய்வுக்கான காலிப் பணியிடங்களின் விவரம் மே 5-ம் தேதியும், அனைத்து வகை ஆசிரியர்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் மே 7-ம் தேதியும் வெளியிடப்படும். தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு மே 8-ல் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறும். முதல் நாளில் மலைச்சுழற்சி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதன்பின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE