சென்னைப் பள்ளிகளில் 14,650 மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்க மாநகராட்சி திட்டம்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகரை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்தார். இதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, தண்டையார் பேட்டை மண்டலத்தில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 2969 மாணவிகள், ராயபுரம் மண்டலத்தில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவிகள், திரு.வி.நகர் மண்டலத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 3160 மாணவிகள், அண்ணா நகர் மண்டலத்தில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1721 மாணவிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 35 பள்ளிகளைச் சேர்ந்த 898 மாணவிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 2699 மாணவிகள், அடையாறு மண்டலத்தில் 9 பள்ளிகளைச் சேர்ந்த 2203 பேர் என்று மொத்தம் 14,650 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், 6-ம் வகுப்பு மாணவிகள் 3642 பேர், 7ம் வகுப்பு மாணவிகள் 3810 பேர், 8-ம் வகுப்பு மாணவிகள் 3711 பேர், 9-ம் வகுப்பு மாணவகள் 3487 பேர் என்று மொத்தம் 159 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெற உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE