வேலைவாய்ப்பு அடிப்படையில் இணை அல்லாத படிப்பு குறித்து உயர்கல்வித் துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: வேலைவாய்ப்பு நோக்கத்தின் அடிப்படையில், எந்தெந்த படிப்புகள், என்னென்ன படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்பது தொடர்பாக மாநில உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொ டர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: வேலைவாய்ப்பு நோக்கத்தின் அடிப்படையில், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.காம் கணினி பயன்பாடு படிப்பு, பி.காம் படிப்புக்கு இணையானது அல்ல.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. கூட்டுறவு படிப்பு, எம்.காம். படிப்புக்கு சமமானது அல்ல.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்பாடு கணிதம் படிப்பு, எம்.எஸ்சி. கணிதம் படிப்புக்கு இணையானது அல்ல. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. சுற்றுச்சூழலியல் படிப்பு, எம்.எஸ்சி. நுண்ணுயிரியல் படிப்புக்கு சமமானது கிடையாது.

பிலிட்-பிஏ தமிழ் இணை அல்ல..: அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.லிட். படிப்பு, பி.ஏ. தமிழ் படிப்புக்கு இணையாது அல்ல.

சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் படிப்பும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்சி. உயிரி-தொழில்நுட்பம் படிப்பும், பி.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு இணையானது அல்ல.

அதேபோல, சென்னை மாநிலக் கல்லூரியில் (தன்னாட்சி அந்தஸ்து) வழங்கப்படும் எம்.எஸ்சி. நுண்ணுயிரியல் படிப்பு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்சி. உயிரி தொழில்நுட்பம் படிப்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்சி. மரைன் பயாலஜி படிப்பு, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயோ-மெடிக்கல் சயின்ஸ் படிப்பு ஆகியவை எம்.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு இணையானது கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE