எஸ்எஸ்எல்சி ஆங்கில தேர்வில் தவறான வினாக்களுக்கு 5 மதிப்பெண் - அரசு தேர்வுத் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் ஆங்கிலத் தேர்வில் தவறான வினாக்களுக்கு 5 கருணை மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி, 20-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 9.20 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். அவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 80 மையங்களில், 60 ஆயிரம் ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஆங்கில வினாத்தாளில் வினா எண்கள் 4, 5, 6- ல் நேர்ச்சொல், எதிர்ச்சொல் ஆகியவை கேட்கப்பட வேண்டியதில், நேர்ச்சொல் மட்டும் கேட்டிருந்ததாகவும், ஏற்கனவே நடந்த வகுப்புத் தேர்வுகளில் இதுபோன்று வினாக்கள் கேட்காததால் மாணவ,மாணவிகள் குழப்பம் அடைந்ததாகவும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும்கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் புகார்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. வினாத்தாளில் 28-வதுஎண் வினாவும் தவறாகக் கேட்கப்பட்டிருந்ததாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

மேலும், தவறான வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று, தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத்துறை முன்வந்துள்ளது.

அதன்படி, ஆங்கிலத் தேர்வில் 4, 5, 6 ஆகிய வினாக்களுக்கு மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால் தலா ஒரு மதிப்பெண் வீதம் 3 மதிப்பெண், அதேபோல தவறாக கேட்கப்பட்ட 28-வது வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தால் 2 மதிப்பெண் என மொத்தம் 5 மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளில் இந்த விவரம் தெளிவாகக் குறிப் பிட்டு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE