JEE கைடன்ஸ், கட்டணம்... ஐஐடி யாருக்கெல்லாம் சாத்தியம்? - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நேர்காணல் | பகுதி 1

By பால. மோகன்தாஸ்

இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருப்பவை ஐஐடிக்கள். உண்மையில் ஐஐடிக்கள் யாருக்கெல்லாம் சாத்தியம் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் மிக முக்கியமானதாக இருக்கிறது. இது குறித்து விரிவாக பதில் அளித்திருக்கிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி. அவரது நேர்காணல் இங்கே...

ஐஐடி என்றாலே அது சராசரி மாணவர்களுக்கான இடம் அல்ல என்ற ஒரு பார்வை பொதுவாக இருக்கிறது. ஐஐடி-யை குறிப்பாக மெட்ராஸ் ஐஐடி-யை மக்களும் பள்ளி மாணவர்களும் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வீர்கள்?

“பிளஸ் 2 அளவில் மாணவர்களை சராசரி மாணவர்கள் என்றும், படிப்பாளி மாணவர்கள் என்றும் வகைப்படுத்துவதே என்னைப் பொறுத்தவரை தவறு. ஒரு குறிப்பிட்ட தலைப்பை எப்படி எடுத்துக்கொள்ளலாம், எப்படி படிக்கலாம் என்பதை அறிந்து மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டும். கணக்கு, இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களிலும் நல்ல அடிப்படையும், புரிதலும் இருக்க வேண்டும். இந்த மூன்று பாடங்களிலும் மாணவர்கள் நல்ல அடிப்படையை பெற வேண்டுமானால், 5-ம் வகுப்பில் இருந்தே அது சரியாக கற்றுத்தரப்பட வேண்டும். எனக்குத் தெரிந்து நிறைய மாணவர்கள், எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் பாடப்புத்தகங்களை மட்டுமே படித்து JEE நுழைவுத் தேர்வில் வெற்றி சென்னை ஐஐடி-யில் சேர்ந்திருக்கிறார்கள். நல்ல மதிப்பெண்களை எடுத்து வந்திருக்கிறார்கள். எனவே, 10 ஆயிரம் பிராப்ளங்களை சால்வ் பண்ணினால்தான் ஐஐடியில் இடம் கிடைக்கும் என்பதெல்லாம் கிடையாது. மாணவர்களுக்கு கல்வி எந்த அளவுக்கு நன்றாகக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதில் முக்கியம்.”

ஐஐடியில் சேர்வதற்கான JEE நுழைவுத் தேர்வுகள் குறித்து சொல்லுங்கள்... இந்த தேர்வு பொதுவாக எப்போது நடத்தப்படுகிறது? இந்த தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

“இயற்பியல், வேதியல், கணிதம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பாடம் இருக்கிறது. இந்தப் பாடம் வெறும் மத்திய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல; எல்லா மாநில பாடத்திட்டங்களிலும் உள்ள பாடங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இதில் உள்ள பாடங்கள் மாணவர்களுக்கு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் கற்றுத் தரப்பட்டிருக்கும். JEE நுழைவுத் தேர்வில் வெற்றிபெற 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கற்றுத்தரப்படும் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி படித்தால் போதாது.

9-ம் வகுப்பில் இருந்தே இந்த 3 பாடங்களுக்கான அடிப்படையை அவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான பாடங்கள் ஆன்லைனிலும் உள்ளன. ஐஐடி கான்பூர் உருவாக்கிய http://www.sathi.iitkgp.ac.in/ என்ற இணையதளத்தில் பாடங்கள் உள்ளன. இதுபோல் நிறைய ஆன்லைன் பாடங்கள் உள்ளன. இதைக்கொண்டு நிறைய பிராப்ளம்களை சால்வ் பண்ண கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் பாடங்களை படித்தால் மட்டும் போதாது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிவற்றில் பிராப்ளங்களை சால்வ் செய்வதற்கான திறனை 9ம் வகுப்பில் இருந்தே வளர்த்துக்கொண்டு வந்தால், அவர்கள் JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன."

JEE நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் தோராயமாக எவ்வளவு பேர் எழுதுகிறார்கள்? எவ்வளவு பேருக்கு இடம் கிடைக்கிறது? இடம் கிடைக்காதவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

“ஆண்டுதோறும் தோராயமாக 15 லட்சம் பேர் JEE (Main) எழுதுகிறார்கள். இது வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை என வெவ்வேறு இடங்களுக்கு ஏற்ப நடக்கிறது. National Testing Agency-தான் இதை நடத்துகிறார்கள். JJE (Main)-ல் வெற்றி பெறக்கூடிய முதல் இரண்டரை லட்சம் பேருக்கு JEE (Advance) எழுதக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இதில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் முதல் 22 ஆயிரம் மாணவர்கள் வரை ஐஐடிக்களுக்கு தேர்வாகிறார்கள்.

ஐஐடிக்களுக்கு தேர்வாகாத JEE (Advance) முடித்த மாணவர்கள் IISER (Indian Institute of Science Education and Research) கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுகிறார்கள். அதேபோல், நாங்களும் ஐஐடி மெட்ராசில் BS (Data Science), BS (Electronic System) எனும் இரண்டு படிப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். JEE (Advance)-க்கு தேர்வான இரண்டரை லட்சம் மாணவர்கள் இந்த படிப்புகளில் சேரலாம். அல்லது நாங்கள் நடத்தக்கூடிய qualifier தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களும் இதில் சேர முடியும். ஐஐடி அல்லாத கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் மாணவர்கள் JEE (Main) மற்றும் JEE(Advance)-ல் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து சேர்க்கப்படுகிறார்கள்.”

சென்னை ஐஐடியில் தமிழக மாணவர்கள், தமிழக கிராமப்புற மாணவர்கள் எந்த அளவுக்கு சேர்கிறார்கள்?

“JEE முடித்துவிட்டு பிடெக் படிக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களில் பலர் வேறு ஐஐடிக்கு செல்கிறார்கள். அதேநேரத்தில், மெட்ராஸ் ஐஐடியில் BS(Data Science), BS(Electronic System) படிக்கும் சுமார் 19 ஆயிரம் மாணவர்களில் ஏறக்குறைய 5 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.”

தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களால் JEE-ல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?

“பயிற்று மொழி என்பது முக்கியமான ஒன்று. நாங்கள் தற்போது தேசி என ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். இதன்மூலம் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை தமிழில் சொல்லிக் கொடுக்க உள்ளோம். அதேபோல், ஐஐடியில் சேரும் மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு அறிந்து கொள்வதற்கு சில மென்மொருட்களை வைத்திருக்கிறோம்; பாடங்களை வைத்திருக்கிறோம். இதன்மூலம் அவர்களால் விரைவாக ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முடியும். எனவே, தமிழ் வழியில் படித்து விட்டு வருபவர்களுக்கு இருக்கும் இடைவெளியை இந்த வகையில் நாங்கள் இட்டு நிரப்புகிறோம்.”

சென்னை ஐஐடிஎம்-ல் JEE நுழைவுத் தேர்வு இல்லாத படிப்புகள் என்னென்ன இருக்கின்றன? அவற்றில் சேர மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

“நான் ஏற்கெனவே சொன்ன BS (Data Science), BS(Electronic System) ஆகிய இரு படிப்புகள் இருக்கின்றன. இதுதவிர, BS (Medical Sciences and Engineering) படிப்பும் இருக்கிறது. IISER aptitude test மூலம் இதற்கான மாணவர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம்.”

ஐஐடியில் கல்விக் கட்டணம் எவ்வாறு இருக்கும்? அதோடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் குறித்தும் சொல்லுங்க..

“எல்லா ஐஐடிக்களிலுமே யுஜி படிப்புக்கு ஒரே மாதிரியான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது வருடத்திற்கு ரூ.2 லட்சம். ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3-ல் 2 பங்கு கட்டண குறைப்பு உண்டு. எனவே, அவர்களுக்கான ஆண்டு கட்டணம் ரூ.67,500 ஆக இருக்கும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே கட்டி விடுகிறது. எனவே, அவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. அதோடு, merit cum means scholarship-ம் நிறைய இருக்கிறது.”

அரசுப் பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான அனைவருக்கும் ஐஐடிஎம் முன்னெடுப்பு இந்த ஆண்டும் தொடர்கிறதா?

“இந்த ஆண்டும் இருக்கிறது. இனி எல்லா ஆண்டுமே இருக்கும். அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள்தான் இதில் இலக்கு. இதற்காகவே நாங்கள் கிராமப்புற தொடர்பு மையங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். தற்போது தமிழ்நாட்டில் 68 கிராமங்களில் 100 தொடர்பு மையங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். உத்தரப் பிரதேசத்தில் 100 கிராமப்புற தொடர்பு மையங்களை ஏற்படுத்த இருக்கிறோம். இதேபோல், நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்காக தொடர்பு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மையங்கள் மூலம் அவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான ஊக்கமும் வழிகாட்டலும் வழங்கப்படும்.”

விரிவான வீடியோ வடிவ நேர்காணல்...

| இந்த நேர்காணலின் அடுத்த பகுதி - விரைவில் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

20 hours ago

கல்வி

18 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்