திருச்சி ஐஐஎம் வளாக நேர்முகத் தேர்வு: இறுதியாண்டு மாணவர்கள் அனைவருக்கும் வேலை - ஆண்டுக்கு ரூ.41.61 லட்சம் வரை ஊதியம்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) நடைபெற்ற இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்முகத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

இதுகுறித்து திருச்சி ஐஐஎம் இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங் கூறியதாவது: திருச்சி ஐஐஎம்-ல் 2021–23 ஆண்டுகளில் மேலாண்மையில் முதுநிலை பட்டம் மற்றும் மனிதவளத்தில் முதுநிலை பட்டம் பயின்ற மாணவர்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

இதில் மைக்ரோசாஃப்ட், எஸ் வங்கி, காத்ரேஜ், அமேசான், சாம்சங், ஆக்சஞ்சர், காக்கிசென்ட், இன்போசிஸ், சொமாட்டோ, டைடன், பி.எம்.டபிள்யு உட்பட 172 நிறுவனங்கள் 290 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்தன.

இதன்படி, ஐஐஎம் நிறுவனத்தில் இறுதியாண்டு பயின்ற அனைத்து மாணவர்களும் பணிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்ச ஆண்டு ஊதியமாக ரூ.41.61 லட்சம், சராசரி ஆண்டு ஊதியமாக ரூ.20.55 லட்சம் வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 13 சதவீதம் கூடுதலான நிறுவனங்கள் திருச்சி ஐஐஎம் மாணவர்களை வேலைக்கு எடுக்க ஆர்வம் காட்டியுள்ளன. ஐஐஎம் மாணவர்களின் திறமையை இந்த சமூகம் நம்புவதும், ஏற்றுக்கொள்வதுமே இத்தனை நிறுவனங்கள் வருவதற்கு காரணம்.

மேலும், இது தொடக்கம்தான் என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டு தொடர்ந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் இத்தகைய வெற்றிக்கு காரணமாக இருந்த அனைத்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13% கூடுதலான நிறுவனங்கள் ஐஐஎம் மாணவர் களை வேலைக்கு எடுக்க ஆர்வம் காட்டியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE