த
ன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் ‘காதல் தேசம்’, ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உட்படப் பல படங்களை மெருகேற்றியவர் கே.வி.ஆனந்த். தற்போது இயக்குநராகிவிட்டாலும் நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக ஒளிப்பதிவு செய்யும் பேரார்வத்துடன் இருக்கும் அவரிடம் ஒளிப்பதிவுத் துறை குறித்து உரையாடியதிலிருந்து…
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒளிப்பதிவு எளிதாகிவிட்டதா?
நிச்சயம் எளிதாகி இருக்கிறது. முன்பு மவுண்ட் ரோட்டில் இரவு நேரத்தில் படம் பிடிக்க வேண்டும் என்றால் பத்து ஜெனரேட்டர் போட்டு விளக்குகள் எரியவிட்டுப் படமாக்குவோம். தற்போது இருக்கும் வெளிச்சத்தில் படமாக்கினாலே அருமையான காட்சிகள் கிடைக்கின்றன.
ஃபிலிமில் படமாக்கும்போது எந்தக் காட்சிக்கு எந்த ஃபில்டர் போட வேண்டும் என்று ஒளிப்பதிவாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது அப்படி அல்ல. தற்போதுள்ள கேமராக்கள் அனைத்துமே மிகவும் திறன் வாய்ந்தவை. கேமராவிலிருக்கும் வசதிகளை ஒளிப்பதிவாளர் தெரிந்து வைத்திருந்தாலே சிறப்பாக பணிபுரியலாம்.
ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்வது எப்படி?
கேமராவில் பதிவாகும் அனைத்தையுமே அழகாகக் காட்ட வேண்டும் என்று நினைப்பது ஒளிப்படம். கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைப்பதுதான் ஒளிப்பதிவு.
வெறுமனே கேமரா எடுத்து ஆன் செய்துவிட்டால் ஒளிப்பதிவு வந்துவிடாது. யார் ஆன் செய்தாலும் முன்னால் இருப்பதை கேமரா காட்டும். ஆனால், அதைச் சரியாகப் படமாக்குவது எப்படி என்பதுதான் ஒளிப்பதிவாளரின் வேலை. இதற்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். புத்தகங்கள் படிக்கும்போது, அதைக் காட்சியாக உள்வாங்கிப் படிக்க வேண்டும். அப்போதுதான் கற்பனைத் திறன் அதிகரிக்கும். அதே நேரத்தில் நிகழ் காலத்தில் மக்களின் மனவோட்டதைக் கவனிக்க வேண்டும். தொழில்நுட்பரீதியிலும் நம்மை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கேமரா என்பது கருவிதான். அதில் உங்களுடைய மனதையும் ஆளுமையையும் செலுத்த வேண்டும்.
ஒளிப்படத் துறையில் இருந்த நீங்கள் பின்பு ஒளிப்பதிவாளர் ஆனது எப்படி?
சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்குத் தீராத காதல். முதலில் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிக்க அணுகினேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. பிறகு பி.எஸ்சி. இயற்பியல் படிக்கும்போது, அதில் ஒளியியல் (Optics) சம்பந்தமாக ஒரு படிப்பு இருந்தது. இதனால் ஒளிப்பதிவாளரான பிறகு லென்ஸ் எப்படிப் பணிபுரிகிறது என்பதை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பின்பு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். ரெனெய்சான்ஸ் (Renaissance) ஓவியங்கள், ரவிவர்மா ஓவியங்கள் பற்றியெல்லாம் அதில் படிப்பு இருக்கும். சிற்பக்கலை, ஓவியக்கலை உள்ளிட்டவற்றைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன். நிறைய உலக சினிமாக்களைப் பார்க்கத் தொடங்கினேன். ஒளிப்படப் பத்திரிகையாளராகப் பணிபுரியும்போது சினிமா மீதான ஆர்வம் இன்னும் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணிபுரிந்தேன்.
ஒளிப்பதிவுக்கும் ஓவியக் கலைக்கும் என்ன சம்பந்தம்?
16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய கலை, இலக்கியப் போக்குதான் ‘ரெனெய்சான்ஸ்’. அப்போது ஒளியை முன்வைத்து நிறைய ஓவியங்கள் வரையப்பட்டன. அவற்றால் நமக்குப் புதிய புரிதல் ஏற்படும். இப்படிப் பல புரிதல்கள் இருந்தால் மட்டுமே நீண்ட காலத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிய முடியும். நானே, மேலும் பல உலக சினிமாக்கள், ஓவியங்கள், சிற்பக்கலைகளைப் படித்திருந்தால் இன்னும் சிறப்பான ஒளிப்பதிவாளராக வந்திருக்கக்கூடும்.
ஒரு மொழியில் எழுத அதன் எழுத்துக்களைத் தெரிந்துவைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல ஒளிப்பதிவை முழுமையாகத் தெரிந்துகொள்ள இவற்றைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவாளர் ஆக என்ன படித்திருக்க வேண்டும்?
முன்பெல்லாம் படப்பிடிப்பின்போது கேமராவைக் கையாண்டு மெல்ல மெல்ல ஒளிப்பதிவாளர் ஆனவர்கள் இருக்கிறார்கள். பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் காலத்தில் படித்துவிட்டு ஒளிப்பதிவாளராக வந்தார்கள். இன்று ஏகப்பட்ட திரைப்படக் கல்லூரிகள் இருக்கின்றன. தேசிய அளவில் புனே திரைப்படக் கல்லூரி, கொல்கத்தாவில் சத்யஜித்ரே திரைப்படக் கல்லூரி ஆகியவை உள்ளன. இவை போக சென்னையில் அடையாறு திரைப்படக் கல்லூரி போன்று மாநில அளவில் சில நல்ல திரைப்படக் கல்லூரிகளும் வந்துவிட்டன. எங்கே படித்தாலும், உங்களுக்குள் சினிமா மீது ஆழமான காதல் இருந்தால் மட்டுமே திரைத்துறையில் கால்பதித்து, நிலைக்கவும் முடியும்.
சிலர் சொந்தப் பணத்தில் கேமரா வாங்கி, அதை முழுமையாகக் கற்றுக்கொண்டு ஒளிப்பதிவாளராக வருகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை திரைப்படக் கல்லூரியில் முழுமையாகப் படித்து வருவதே சிறந்தது. விஷுவல் கம்யூனிகேஷன் படித்தாலும் ஒளிப்படக் கலை, ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் பெயிண்டிங், ஸ்கெட்சிங் என நிறையக் கற்றுக்கொள்ளலாம்.
படித்துவிட்டு நேரடியாக ஒளிப்பதிவாளராக முடியுமா?
கண்டிப்பாக முடியாது. யாரிடமாவது பணிபுரிய வேண்டும். நல்ல ஒளிப்பதிவாளரிடம் சேர்ந்தால் கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். திறமையில்லாத ஒளிப்பதிவாளரிடம் சேர்ந்தால் எதையெல்லாம் செய்யக் கூடாது எனக் கற்றுக்கொள்ளலாம்.
நிறைய ஒளிப்பதிவாளர்கள் வந்துவிட்டார்களே, ஊதியம் எப்படி இருக்கிறது?
சரியான வாய்ப்பு கிடைக்காமல் கல்யாணத்துக்கு ஒளிப்பதிவு செய்து மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். நான் சினிமாவுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்வேன் என்று காத்திருந்து சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்களும் இருக்கிறார்கள். அரசாங்க வேலையேபோதும் என தூர்தர்ஷனில் ஒளிப்பதிவுக்குச் சேருபவர்கள் இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்பது சினிமா மட்டுமல்ல. கல்யாண வீடியோ, தூர்தர்ஷன், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், செய்தி தொலைக்காட்சி, விளம்பரங்கள், திரைத் துறை இப்படிப் பல இடங்களில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இவை அல்லாமல் சமூக ஆர்வலர்களுக்கு ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு செய்பவர்களும் இருக்கிறார்கள்.
நிறைய வழிமுறைகள் சொல்கிறீர்கள். இவற்றில் எதில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது?
வேலைவாய்ப்பை மட்டுமே மனதில் வைத்து வேலை தேடக் கூடாது என்பது என்னுடைய கருத்து. திரைத்துறையில் ஒளிப்பதிவு செய்வது மட்டுமே உயர்வு என்று நினைக்க வேண்டாம். உங்களுக்குப் பிடித்து செய்தால் மட்டுமே அதன் மூலம் வரும் பணம் மனத்திருப்தியைக் கொடுக்கும். இந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகம், சம்பளம் நிறைய கிடைக்கும் எனச் சொல்ல மாட்டேன். ‘நமக்கு சினிமா மீது ஆர்வம் இருக்கிறதா, சினிமாவைக் காதலிக்கிறோமா’ என்று உங்களை நீங்களே கேட்டு அதற்கான விடை கண்டுபிடித்த பிறகு வாருங்கள். நம்ம கேமராவை ஆட்டிப் படைக்கிறோமா, இல்லையென்றால் கேமரா நம்மை ஆட்டிப் படைக்கிறதா என்பதுதான் இங்கு முக்கியம்!
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
4 hours ago
கல்வி
9 hours ago
கல்வி
9 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago