கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் மாநில அரசுகளையே சார்ந்தது: மத்திய அரசு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, மாநில அரசுகளை சார்ந்தது என்ற தகவல் மக்களவையில் வெளியாகி உள்ளது. இதை விழுப்புரம் தொகுதி எம்.பி.யான டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமான பதிலாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் அளித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ''இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009, இயற்றப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் குழந்தைகளின் தரநிலைகளின்படி கற்றல் இடைவெளி இருக்கிறதா? அப்படியானால், அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் குறைந்தபட்ச கற்றல் அளவை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஜனவரி, 2020 முதல் டிசம்பர் 2022 வரை, சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்தோர்/குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலாக மக்களவையில் கல்வி அமைச்சர் அளித்த விரிவான அறிக்கையில், ''கல்வி என்பது அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டம், 2009ன் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே பொருத்தமான அரசாங்கங்களாகும். மேலும், ஆர்டிஇ-யின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி பள்ளிகளில் பள்ளிக் கட்டமைப்புகளை வழங்குவதற்கான பொறுப்பும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கே உள்ளது'' எனக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE