பிளஸ் 2 கணித தேர்வு கடினம்: மாணவ, மாணவிகள் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம்தேதி தொடங்கியது. மொழித்தாள், ஆங்கிலம், இயற்பியல் பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ளன.

இந்நிலையில், கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. தொழிற்கல்விப் படிப்பான பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில், கணித மதிப்பெண் முக்கியப் பங்கு வகிக்கும்.

கணிதத் தேர்வு எளிதாக இருக்குமா, கடினமாக இருக்குமா என்ற அச்சம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் இருக்கும். இந்நிலையில், நேற்று நடைபெற்ற கணிதத் தேர்வில் சில வினாக்கள் சற்றுக் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

ஒரு மார்க் கேள்வியில் 6 வினாக்களும், 2 மார்க், 3 மார்க், 5 மார்க் பகுதிகளில் தலா ஒரு வினாவும் மிகவும் கடினமாக இருந்ததாகவும், ஆழமாக யோசித்து, விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறினர்.

குறிப்பாக, 5 மார்க் பகுதியில் ஒரு கேள்விக்கு கொடுக்கப்பட்ட இருசாய்ஸ் வினாக்களும் கடினமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கணிதத் தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டிருப்பதால், இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் மற்றும் 95-க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும், அதன் காரணமாக பொறியியல் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE