தொலைதூரக் கல்வி சேர்க்கை மார்ச் 27 வரை நீட்டிப்பு: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இக்னோ பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல சீனியர் இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலை தூரக் கல்வி மற்றும் ஆன்லைன் வாயிலாக பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 2023 ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (சான்றிதழ் படிப்பு மற்றும் செமஸ்டர் முறையிலான படிப்புகளுக்கு இது பொருந்தாது.) தொலை தூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மார்ச் 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE