ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம் உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் கே.லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுவதைப்போல, பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குமாறு, பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகள் அடிப்படையில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டவாறு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் என திருத்திய தொகுப்பூதியத்தை, அரசாணை வெளியிடப்படும் நாள் முதல், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE