சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறும் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் - அறிவிப்பு சொல்லும் செய்தி என்ன?

By பால. மோகன்தாஸ்

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஏற்கெனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறிவிட்ட புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகள், தற்போது 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திற்கு மாற இருப்பதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு, தமிழகத்துக்கு என்ன செய்தி சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

புதுச்சேரி பட்ஜெட்டை கடந்த திங்கள்கிழமை (மார்ச் 3) தாக்கல் செய்த முதல்வரும், நிதித்துறையை தன்னிடம் வைத்திருப்பவருமான ரங்கசாமி, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

இந்த அறிவிப்பில் 3 முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒன்று, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்தி வந்த புதுச்சேரி அரசு, தற்போது அந்த பாடத்திட்டத்தை கைவிட முடிவு செய்திருக்கிறது. இரண்டாவதாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்துக்கு மாறப்போவதாக அறிவித்திருக்கிறது. மூன்றாவதாக, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவே இந்த முடிவு என்று கூறியிருக்கிறது.

புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு, தமிழக அரசின் பாடத்திட்டத்தையும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் ஒப்பிட வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்கிறது. அதோடு, தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

இந்தியக் கல்வி முறை என்பது CBSE, CISCE, NIOS எனும் 3 மத்திய அரசு கல்வி வாரியங்களையும், தமிழ்நாடு போன்று 30-க்கும் மேற்பட்ட மாநில அரசு கல்வி வாரியங்களையும் கொண்டுள்ளது. அதோடு, தனியார் பள்ளிகளின் கல்வி வாரியமான ICSE, சர்வதேச கல்வி வாரியமான IB, CIE ஆகியவையும் இந்தியாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கல்வி வாரியமும் மாணவர்களை கல்வியில் மேம்பாடு அடையச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டவைதான் என்றாலும், அதை அடைவதற்கான வழிமுறைகளில் வேறுபாடுகளைக் கொண்டிருப்பவை. இந்த வேறுபாடுகளில் கல்வியின் தரமும் அடங்கி இருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது.

பொதுவாக, மாநில கல்வி வாரியங்கள் அந்தந்த மாநில மாணவர்களுக்கானவையாகவும், அந்தந்த மாநிலத்தின் சமூக, பொருளாதார, கலாச்சார அடிப்படைகளைக் கொண்டவையாகவும் கருதப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் கல்வி வாரியமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் இருக்கும் சாதக, பாதகங்கள் இதிலும் இருக்கின்றன. மாணவர் சேர்க்கை எளிதாக இருக்கிறது; தனியார் பள்ளிகளில் கட்டணம் குறைவாக இருக்கிறது; பாடபுத்தகங்கள் எளிதாக இருக்கின்றன; பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற முடிகிறது போன்றவை சாதக அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

அதேநேரத்தில், பாடத்திட்டம் போதுமானதாக இல்லை; போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றதாக இல்லை; விருப்பப் பாடங்களை தேர்வு செய்வதில் அதிக சுதந்திரம் இல்லை; திறன் வளர்ப்பு போதுமானதாக இல்லை போன்ற குறைபாடுகள் இதில் இருப்பதாக சில கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதை மறுக்கும் கல்வியாளர்களும் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக மாணவர்களுக்கு திணிப்பது ஆபத்து என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிபிஎஸ்இ கல்வி முறை, என்சிஇஆர்டி வடிவமைக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இந்த கல்விமுறை இருப்பதால், தேசிய கண்ணோட்டம் மற்றும் நோக்கங்களைக் கொண்டிப்பதாக ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. இந்தியாவில் ஏறக்குறைய 24 ஆயிரம் பள்ளிகள் இந்த கல்விமுறையைப் பின்பற்றுகின்றன. 26 வெளிநாடுகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் சிபிஎஸ்இ முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கல்வி வாரியமாக சிபிஎஸ்இ உள்ளதால், இதன் செல்வாக்கும் அதிகம். அதோடு, இதன் தரக்கட்டுப்பாடுகளும் அதிகம்.

கல்வியாளர் பத்மா ஸ்ரீநாத்

இந்த ஒப்பீடு மாநில பாடத்திட்டம் சரியா, சிபிஎஸ்இ பாடத்திட்டம் சரியா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு பதில் அளித்துள்ள கல்வியாளர் பத்மா ஸ்ரீநாத், “எதுவாக இருந்தாலும் அதை பயிற்றுவிக்கும் சூழலும், ஆசிரியர்களின் தரமுமே முக்கியம்” என்கிறார். அவர் மேலும் கூறும்போது, ''நடுத்தரக் குடும்பங்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள். குறைந்த வருமானம் உடையவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள். இதில், வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பொருத்தவரை அவை வலுவாகவே இருக்கின்றன. இது மாணவர்கள் உயர் கல்வி பெறவும், வேலைவாய்ப்பைப் பெறவும் உதவுகின்றன.

நான் இரண்டு குழந்தைகளின் தாய். எனது ஒரு குழந்தை மாநிலக் கல்வி முறையிலும், மற்றொரு குழந்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும் படித்தார்கள். இரண்டிலுமே அறிவியல், கணிதம் என வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்தில் பெரும் மாற்றம் இருக்கவில்லை. அதேநேரத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கூடுதல் தலைப்புகளில் பாடங்கள் இருக்கின்றன. அதோடு, கற்பிக்கும் முறையும் மாறுபட்டதாக இருக்கிறது. அதாவது, மாறுபட்ட கற்பிக்கும் முறையின் மூலம் அதிகம் கற்க வேண்டிய கட்டாயத்தை இது ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு இது சாதகமாக இருக்கிறது.

மாநில கல்வி வாரியம் தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையைக் கொண்டிருக்கிறது. சிபிஎஸ்இ பிராந்திய மொழி, ஆங்கிலம், இந்தி என மும்மொழி கொள்கையைக் கொண்டிருக்கிறது. மாநிலப் பாடத்திட்டத்தில் மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இரண்டுமே முக்கியம்தான். இரண்டிலுமே சாதக பாதகங்கள் இருக்கின்றன. எனவே, தங்கள் குழந்தை எந்த பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள்தான் போதுமான தெளிவுடன் இருக்க வேண்டும். இந்தி படித்தால் தேசிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் பலர் இந்தி பிரச்சார சபா மூலம் இந்தி கற்பதையும் நான் கவனித்து வருகிறேன்'' என தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருந்தாலும், இந்த விவகாரத்தில் அரசியலும் அடங்கி இருப்பதாக சில கல்வியாளர்கள் கூறுகின்றனர். மும்மொழி கொள்கையை முன்வைக்கும் தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும், புதுச்சேரியில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இருப்பதாலும், மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு இணங்க மாநில அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அரசியல் நிர்ப்பந்தம் தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. அதோடு, புதுச்சேரிக்கு என தனியாக ஒரு கல்வி வாரியத்தை உருவாக்குவதற்கு ஏற்ற நிதி சுதந்திரம் அதற்கு இல்லை. ஆனால், அரசியல் ரீதியாகவும், நிதி சார்ந்தும் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பை தமிழக அரசு சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. மாணவர்களின் வயதுக்கு ஏற்ற அளவு கல்வி; காலத்திற்கு ஏற்ற கல்வி; தரமான கற்பித்தல் முறை ஆகியவை நமது கல்வி நிலையங்களில் இருக்கின்றனவா என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்