‘‘தமிழ் மொழி வல்லமை பெற திருக்குறளை படியுங்கள்” - அகரமுதலி திட்ட இயக்குநர் வலியுறுத்தல்

By என். சன்னாசி

மதுரை: தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கம் சார்பில், தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளுக்குச் சென்று கலைச்சொல்லாக்கம் குறித்தும், அகராதிகளின் பயன்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சொற்குவை தூதுவர் பயிற்சி திட்டம் நடத்தப்படுகிறது.

இதன்படி, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வக்புவாரிய கல்லூரி, மங்கையர்க்கரசி கலை , அறிவியல் கல்லூரி, செந்தமிழ் கலை, கீழ்த்திசைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 200பேருக்கான சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டம் நடந்தது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் திட்டத்தின் நோக்கம் பற்றி பேசியதாவது:

உலகில் பேசும் மொழிகளின் எண்ணிக்கை சுமார் 6000த்தைத் தாண்டும். பேசப்படும் மொழிகளில் மொழியப்படும் சொற்கள் காரண காரியத்தோடு அமைக்கப்பட்டு இருக்கிறதா? என்றாலும், தமிழில் எல்லாச் சொற்களும் காரண காரியத்தோடே அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்பே செறிவான கட்டமைப்பைக் கொண்ட மொழியாக தமிழ் இருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்குகளும் சாட்சியாக விளங்குகின்றன.

ஒவ்வொரு சொற்களுக்கும் ஒரு வேர் காரணமாக அமைகிறது. அந்த வேரினை ஆராய்ந்து பார்த்துப் பன்மொழிப் புலமையோடு உலகிற்கு எடுத்தியம்பியவர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககத்தின் கருமான் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் ஆவார்.

அவர்தம் வழியில் தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், அகராதியில் துறையில் இன்றைக்கு ஆக்கபூர்வமான தமிழ் வளர்ச்சிக்கு வளமான சொற்களைச் சேர்க்கும் நோக்கில் மாணவர்களிடத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறோம்.

தமிழில் உள்ள இலக்கிய அறிவு சார்ந்த சொற்களை ஆய்ந்து அதற்கு இணையான சொற்களை ஆக்குவதே கலைச்சொல்லாக்கம் என்பதால் பிற மொழி அறிவும் வேண்டும். தமிழில் ஏற்படுகிற கலைச்சொற்களைக் காரண காரியத்தோடு எக்காலத்திற்கும் பொருந்துகிற வளமான சொற்களாகத்தான் பாவாணர் வழியில் நாம் அமைத்து வருகிறோம். அதனால் தான் கடந்த 2021 இல் சொற்குவை எனும் வலைத்தளத்தில் 3 இலட்சத்தில் 91 ஆயிரத்து 682 ஆக இருந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாம் பல்வேறு ஆக்க முயற்சிகள் எடுத்ததன்மூலம் 8 இலட்சத்து 57 ஆயிரத்து 885 சொற்களாக உயர்த்தியிருக்கிறோம்.

உலகில் எந்த மொழியில் எந்தச் சொல்லைக் கேட்டாலும் அதற்கு இணையான தமிழ்ச் சொல்லைச் சொல்லுவதற்கு வருங்காலத்தில் தமிழ்நாடு அரசின் சொற்குவை வலைத்தளம் பயன்படும். திருக்குறளை ஆழ்ந்து உணர்ந்து உரக்கக் குரல் கொடுத்துப் படியுங்கள். அதிலே கலைச் சொல்லாக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

வட்டார வழக்குச் சொற்களை நாம் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை 15000 மேற்பட்ட சொற்களை நாம் ஆவணப்படுத்தி உள்ளோம். மருத்துவத் துறை சார்ந்த கலைச்சொல் அகராதி வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே ஒரு பொருட் பன்மொழி அகராதி, மயங்கொலிச் சொல் அகராதி, தமிழ் -தமிழ் கையடக்க அகராதி, அயற்சொல் அகராதி, மாணவர் இலக்கியத் தமிழ் அகராதி, நடைமுறைத் தமிழ் அகராதி வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் உலகில் சிறந்து விளங்க தமிழில் இணையான கலைச்சொற்களைப் படையுங்கள்" இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

12 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

16 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்