சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒவியம் உட்பட கலை, தொழிற் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

தேர்வு மையங்களில் பலத்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. செல்போன் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைகளுக்குப் பின்னரே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நடப்பாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 21 லட்சத்து 86,940 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக நாடு முழுவதும் 7,240 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 21-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதேபோல, 12-ம் வகுப்புத் தேர்வில் 16 லட்சத்து 96,770 மாணவர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் 6,759 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 5-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் இருந்து சுமார் 1.3 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி நடத்தும் பொதுத் தேர்வுகள் மார்ச் 13-ம்தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE