கல்வி என்பது சமூக மேம்பாட்டுக்கான கருவி - மீனாட்சி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காமராசர் பல்கலை. தேர்வாணையர் கருத்து

By என். சன்னாசி

மதுரை: கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான கருவி என மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காமராசர் பல்கலைக்கழக தேர்வாணையர் தர்மராஜ் பேசினார்.

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் 45-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் சூ. வானதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராசர் பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் (பொறு) தர்மராஜ் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: "பட்டம் என்பது வேலைவாய்ப்புக்கான ஒரு வழி மட்டும் அல்ல. அது சமூக மேம்பாட்டுக்கான ஒரு கருவி. சமூக மாற்றத்திற்கு கல்வி துணை செய்யும்படி பயன்படுத்தவேண்டும். கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி பெண்கள் முன்னேறுங்கள். தமிழ்நாட்டில் பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் போடுவது தவிர்க்கப்பட்டு, பெரும்பாலும் பெயருக்கு பின்னால் கல்வித் தகுதியை குறிப்பிடும் அளவுக்கு மாறிவிட்டோம். கல்வியை பெரிய ஆயுதமாக கருதவேண்டும். பெண்கள் முன்னேற்றம், ஆளுமை திறன் மேம்பாட்டில் இக்கல்லூரியின் பங்களிப்பு அதிகம்" என்றார்.

விழாவில் 1253 இளநிலை, 321 முதுநிலை, 21 ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) என 1595 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. துறைவாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 30 பேருக்கு பதக்கமும், தமிழ்துறையில் முதல் மதிப்பெண் பெற்ற சுகன்யா, வணிகவியல் பிரிவில் ரா. பாரதி, அறிவியல் பிரிவில் கேதாரணி ஆகியோருக்கு பரிசுடன் பதக்கம், மீனாட்சி சிலை விருதும் வழங்கப்பட்டது.

மீனாட்சி மகளிர் கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி, அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியைகள் பங்கேற்றனர். முன்னதாக முன்னாள் மாணவியர் சங்கக்கூட்டம் நடந்தது. கல்லூரி வளர்ச்சியில் முன்னாள் மாணவிகளின் பங்களிப்பு குறித்து முன்னாள் மாணவி, தற்போதைய கல்லூரி முதல்வர் சூ. வானதி பேசினார். சங்க செயலர் ராஜேஷ் புஷ்பம், பொரு ளாளர் சமீன்பானு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE