நீலகிரி மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாத 4,098 பேருக்கு கற்றல் பயிற்சி வகுப்பு

By செய்திப்பிரிவு

உதகை: புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தேசிய கல்விக் கொள்கை - 2020 பரிந்துரைப்படி, வயது வந்தோருக்கான ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிக் கல்வி துறை மூலமாக ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாதவர்களாக உதகை வட்டாரத்தில் 1,100, குன்னூரில் 650, கோத்தகிரியில் 698, கூடலூரில் 1,650 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 331 மையங்களில் தன்னார்வலர்கள் மூலமாக, கடந்த சில நாட்களாக கற்பித்தல் பணி நடந்து வருகிறது. கூடுதல் திறனாக அடிப்படை சட்டம், வாக்காளர் உரிமைகள், கடமைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கற்பிக்கப்படும். 6 மாத கால பயிற்சி முடித்த பின்னர், தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பயிற்சி காலத்தில் அவர்களுக்கு கைத்தொழில் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE