திருச்சி: மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு வசூலிக்கப்படும் தேர்வுக் கட்டணங்களை மத்திய அரசு குறைக்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிளஸ் 2 முடித்த பின்னர், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள், மத்திய, மாநில அரசுகள், தனியார் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோர் இந்த கல்விநிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக ஜேஇஇ (மெயின்ஸ்), ஜேஇஇ (அட்வான்ஸ்டு), சியூஇடி (மத்திய பல்கலைக்கழகங்கள்), நீட் (மருத்துவப் படிப்பு), நாட்டா (கட்டிட எழிற்கலை) ஆகிய படிப்புகளில் சேர தமிழக மாணவ, மாணவிகள் அதிக அளவில் நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வுகளுக்கான கட்டணங்கள் தொடர்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகின்றன.
ஐஐடியில் சேருவதற்கு நடத்தப்படும் ஜேஇஇ (அட்வான்ஸ்டு) நுழைவுத் தேர்வுக்கு 2016-ம் ஆண்டில் ரூ.2 ஆயிரம் தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கடந்தஆண்டு ரூ.2,800 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டுஜேஇஇ (மெயின்ஸ்) நுழைவுத்தேர்வுக்கு பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.1,000, பெண்களுக்கு ரூ.800, ஆதிராவிடர், பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு ரூ.500 வசூலிக்கப்பட்டது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு கடந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கு ரூ.1,600, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், பிற பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ரூ.1,500, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.900 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து உயர்கல்வி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர் கல்வியாளர்கள்.
இது குறித்து கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற முதல்வருமான எஸ்.சிவக்குமார் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: உயர்கல்வியை அதிகம் பேர் கற்பதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதுடன், தனிமனிதனின் வருமானமும் உயர்கிறது. உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான கட்டணம் அதிகம் என்பதால், கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், திறமையான பலர் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல், இந்தநுழைவுத் தேர்வுகளை எழுதாமலேயே விட்டு விடுகின்றனர்.
இதற்கு தீர்வுகாணும் வகையில் பிளஸ் 2 மாணவர்கள் குறைந்த பட்சம் 3 நுழைவுத் தேர்வுகளை இலவசமாக எழுதுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அல்லது,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 5 பேரை தேர்வு செய்து நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தை அரசே செலுத்தலாம். இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற வரையறையுடன் இதை செயல்படுத்தலாம் என தெரிவித்தார்.
இது குறித்து பெற்றோரான ரகமத்துல்லா கூறுகையில், ‘‘உயர்கல்வி நுழைவுத் தேர்வுக்கு வசூலிக்கப்படும் அதிகளவிலான கட்டணங்களால் பெற்றோருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதைக் குறைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு எதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது புதிராக உள்ளது. நிகழாண்டில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு கட்டணங்களை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
கல்வி
56 mins ago
கல்வி
6 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago