சென்னை அரும்பாக்கத்தில் ஆயுஷ் படிப்பு கலந்தாய்வு இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 89 இடங்கள் ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 89 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய ஆயுஷ் பட்டப் படிப்புகளில் 2022-23 கல்வி ஆண்டுமாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வுமதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 878 விண்ணப்பங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுக் கல்லூரிகளில் 21 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 68 இடங்கள் என மொத்தம்89 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்குகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல்பகல் 1.30 மணி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.

பொது பிரிவினருக்கான கலந்தாய்வு பிற்பகலில் தொடங்குகிறது. ஜன.4-ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது. டிச.31, ஜன.1, 2-ம் தேதிகளில் கலந்தாய்வு இல்லை. இதுதொடர்பாக மேலும் விவரங்களை சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnhealth.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE