பள்ளி கல்வித்துறையின் கலைத் திருவிழா போட்டி - போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படாததால் மாணவர்கள் தவிப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: பள்ளி கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 5 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதற்கு தேர்வான மாணவர்களுக்கு போட்டி நடைபெறும் இடங்களுக்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்துவதற்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தார். இந்த கலை திருவிழாவில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், தமிழ் மற்றும் ஆங்கில அழகு கையெழுத்து, நாட்டுப்புற பாடல், வில்லுபாட்டு, வாத்திய கருவிகள் இசைத்தல், நடனம், நாடகம், கதை எழுதுதல், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட 186 வகையான கலைத்திறன் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

இப்போட்டிகள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவம்பர் 23-ம் தேதி தொடங்கியது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில போட்டியானது அரையாண்டு விடுமுறையில் டிசம்பர் 27 முதல் 30 வரை நடைபெறுகிறது.

இப்போட்டியானது 6 முதல் 8-ம் வகுப்பு வரை மதுரை மாவட்டத்திலும், 9, 10 வகுப்புகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. ஒரு மாவட்டத்தில் 5 முதல் 6 இடங்களில் பிரிவு வாரியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநில அளவிலான கலை திருவிழா போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக வரவேற்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, போக்குவரத்து, இடவசதி, உணவு, மாணவர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநில அளவிலான கலை திருவிழா போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவர்களை ஆசிரியர் துணையுடன் பாதுகாப்பாக அழைத்து வர போக்குவரத்து செலவினங்களுக்காக மாவட்டத்திற்கு ரூ.5 லட்சம் வீதிம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மாநில போட்டியில் பங்கேற்பதற்காக 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் 40 பள்ளிகள், 9, 10 ம் வகுப்பு பிரிவில் 59 பள்ளிகள், 11, 12-ம் வகுப்பு பிரிவில் 53 பள்ளிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அதில் பெரும்பாலான பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் மாநில போட்டி நடைபெறும் மாவட்டத்திற்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை.

மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களது சொந்த ஏற்பாட்டில் போட்டிக்கு சென்றுவிட்டு அதன்பின் அதற்குரிய கட்டணத்தை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவிகள் மற்றும் உடன் துணைக்கு செல்லும் ஆசிரியைகள் எப்படி போட்டி நடக்கும் மாவட்டத்திற்கு செல்வது, பின் அங்கிருந்து போட்டி நடைபெறும் இடங்களுக்கு எவ்வாறு செல்வது என தெரியாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் தவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவர்களை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். அதிலும் மாணவிகள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். முதலில் பள்ளி கல்வித்துறை சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டதால் மாணவிகளை அனுப்ப பெற்றோர்கள் சம்மதித்தனர். ஆனால் தற்போது தனியாக செல்ல வேண்டும் என்பதால் மாணவர்களை போட்டிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தனியாக செல்ல வேண்டும் என்பதால் ஆசிரியைகளும் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் ஆசிரியர்களின் பயண செலவு தொகையை பெற முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் போட்டிக்கு மாணவர்களை அழைத்து செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாநில போட்டிக்கு செல்வதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவில் உள்ள பள்ளிகளை இணைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

22 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்