2023 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பிரதமருடன் கலந்துரையாட முன்பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசு சார்பில் ‘பரிக்ஷா பே சார்ச்சா’ (பிபிசி) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் சமூக ஊடக பக்கத்தில், “பிபிசி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் தேர்வு தொடர்பான அச்சத்திலிருந்து விடுபடுவது எப்படி, தேர்வுகளை விழாக்களைப் போல கொண்டாடுவது எப்படி என்பது குறித்த மந்திரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் பிரதமருடன் நேரடியாக உரையாடுவதற்கான வாய்ப்பை பெறுவதுடன் பாராட்டு சான்றிதழையும் பெற முடியும்” என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற பிபிசி நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2.71 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சுமார் 1 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE