தமிழக அரசுப் பள்ளிகளில் தொடங்கியது ‘வானவில் மன்றம்’ - நோக்கம், செயல்பாடுகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் 2022-23-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், காட்டூர் - பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார். மேலும் முதல்வர் ஸ்டாலின், அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் ஆகும்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை. பகுத்தறிவைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் "வானவில் மன்றம்" அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு. கற்றல் இனிமையாகட்டும், கல்வி முழுமையாகட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE