பி.காம். நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்: கல்லூரிகள் அலைக்கழிப்பால் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்

By சி.பிரதாப்

சென்னை: பி.காம். நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு அரசு உட்பட பெரும்பாலான கல்லூரிகள் மறுப்பு தெரிவிப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 6 அரசு உட்பட 10 பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் பட்டயப் படிப்பு (டி.காம்.Diploma in Commercial Practice) பயிற்றுவிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த3 ஆண்டுகால படிப்பை படித்து வருகின்றனர்.

இதற்கிடையே டி.காம். முடித்த மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டு (2022-23) முதல் பி.காம். படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்ந்து படிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்தது.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வாயிலாக அனைத்துவித கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அரசின் உத்தரவை மீறி, பெரும்பாலான கல்லூரிகள் பி.காம். 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிப்பதுடன், விண்ணப்பம் கேட்டுச் செல்பவர்களை தொடர்ந்து அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நீண்டகால போராட்டத்துக்கு பிறகு..

இதுகுறித்து பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் சிலர் கூறியதாவது. தமிழகத்தில் டி.காம். பட்டயப் படிப்பு50 ஆண்டுகளுக்கு மேலாக கற்றுத் தரப்படுகிறது. பி.காம். படிப்பின் பாடங்கள் போலவே இருப்பதுடன், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணிப் பயிற்சி (டேலி, டிடிபி) ஆகியவையும் இதனுடன் சேர்த்து வழங்கப்படுகின்றன. அதேபோல, டி.காம். பட்டயச் சான்றிதழ், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கணக்கியல், தட்டச்சு, மற்றும் சுருக்கெழுத்து உட்பட அரசுத் தேர்வுகளுக்கு இணையானதாகவும் கருதப்படும்.

இந்த பட்டயப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடரஏதுவாக, நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு, பி.காம். நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக அனைத்துவித கல்லூரிகளிலும் 2-ம் ஆண்டில் கூடுதலாக 10 சதவீதம் இடங்கள் ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகள் ஏற்க மறுக்கின்றன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள கல்லூரிகள் சேர்க்கை வேண்டி செல்லும் மாணவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றன.

தனியார் கல்வி நிறுவனங்களைவிட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் இதற்கு மறுப்பு தெரிவிப்பதுதான் வருத்தமாக உள்ளது. ‘கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவில்லை, கூடுதல் இடங்கள் ஒதுக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என முரணானகாரணங்களை கல்லூரிகள் தெரிவிக்கின்றன. 60 பேர் படிக்கும் ஒரு பாடப் பிரிவில் 6 பேருக்கு இடம் அளிப்பதில் சிக்கல்கள் எழாது. 10 சதவீதம் இல்லாவிட்டால், அதற்கு குறைவான இடங்களை ஒதுக்கி, சில மாணவர்களுக்குகூட சேர்க்கை வழங்கலாம்.

அதை விடுத்து, சேர்க்கை தரமறுப்பதும், மாணவர்களை அலைக்கழிப்பதும் ஏற்புடையது அல்ல. கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் புகார்கள் அளித்தும் பலன் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசுக் கட்டணத்தில் சுயநிதிபிரிவில்கூட இடங்களை ஒதுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

துறை ரீதியாக நடவடிக்கை

இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது,‘‘பி.காம். 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு கல்லூரிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்றுசுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைமீறி கல்லூரிகள் அனுமதிமறுத்தால், மாணவர்கள் மண்டல அலுவலகங்களில் புகார் தெரிவிக்கலாம். அதன்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

மேலும்