தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாததால் 60-க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை தாமதம்

By செய்திப்பிரிவு

சென்னை: சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடித்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாததால் 60-க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.2 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு சேர்க்கைக்கு 2.98 லட்சம் மாணவர்கள் கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை முழுமையாக பதிவுசெய்துள்ளனர்.

அந்த மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து, இறுதி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வை ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. பெரும்பாலான கல்லூரிகளில் கலந்தாய்வின் முதல்நாளில் மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி நடத்தப்பட உள்ளது.

அதேநேரம் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாததால் மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக திருநெல்வேலி உட்பட தென் மாவட்ட கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் அடுத்த வாரமே வெளியிடப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு கல்லூரிக்கும் 2 ஆயிரத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதன் விவரங்களை சரிபார்த்து தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

முழுமையான கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லூரிகளில் இந்த சிக்கல் இருப்பதில்லை. புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளில் பணியாளர்கள் குறைவாக உள்ளதால், அவர்கள் பணிகளை முடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால்தான் பல்வேறு கல்லூரிகளில் சேர்க்கை பணியைத் தொடங்க முடியவில்லை’’ என்றனர்.

அதேநேரம் சில அரசுக் கல்லூரிகளில் திட்டமிட்டே சேர்க்கைப் பணிகளை தாமதம் செய்து வருவதாகவும், இதனால் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகிவிடும் சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஏற்கெனவே பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் சேர்க்கைப் பணிகள் முடிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அரசுக் கல்லூரிகளில் காலியிடங்களை நிரம்பும் வரை கலந்தாய்வை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

9 hours ago

கல்வி

13 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்