வெளிநாடுகளில் கல்வி கற்போருக்கான தேசிய கல்வி உதவித் தொகை கொள்கையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஏ.நாராயணசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி புதன்கிழமை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியது: “வெளிநாடுகளில் கல்வி கற்கும் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் இதர மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வரும் இந்தத் துறை, நடைமுறைகளை எளிதாகவும், அவற்றை மேலும் வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் மாற்றி வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பயில்வதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், நிதி ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக அதிகபட்ச தேவையுள்ள பாடப் பிரிவுகளுக்கு கல்வி உதவித் தொகையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் வலுவாக உள்ள அல்லது இந்தியாவில் களப்பணி செய்ய முடிகின்ற துறைகள் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் இந்தியா குறித்த சமூக ஆய்வுகள் போன்ற பாடப்பிரிவுகள் 2022 – 2023 லிருந்து கல்வி உதவித்தொகை பெறுவதற்கு உரியவையாக கருதப்பட மாட்டாது.

அதே சமயம் சர்வதேச வெளிப்பாட்டுக்கு தேவைப்படுகின்ற சட்டம், பொருளாதாரம், உளவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு நிதியுதவி செய்யப்படும். இந்த மாற்றம் காரணமாக ஏழ்மையான ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்கள் உலகளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே வெளிநாடுகளில் கல்வி கற்போருக்கான புதிய தேசிய கல்வி உதவிக் கொள்கை இருக்காது. தற்போதுள்ள ஷெல்யூல்டு வகுப்பு மற்றும் இதர மாணவர்களுக்கான வெளிநாட்டில் பயில தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் அண்மையில் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்தத் துறையின் மூலம் தொடர்ந்து அமலாக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE