5,000 இடங்களுக்கு 60,000 விண்ணப்பங்கள்... வேளாண் படிப்புகளுக்கு கூடும் மவுசு: தமிழகத்தில் கூடுதல் கல்லூரிகள் அமையுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படும் நிலையில், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். தமிழகத்தில் வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும் என்று வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகம், அதன் கீழ் 18 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 28 தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு மாணவர்கள் வேளாண் படிப்புகள் படிக்க 5,000 இடங்கள் உள்ளன.

வேளாண் கல்வி படித்தால் வேளாண்மை அதிகாரி, தோட்டக் கலைத் துறை அதிகாரி, வங்கி அதிகாரி, ஆராய்ச்சி நிலையங்களில் பணி, மத்திய அரசு சார்ந்த ரப்பர் தொழிற்சாலை, காபி வாரியம், தென்னை வாரியம் உள்ளிட்ட பயிர் வாரியங்கள் பணி, தனியார் உரத்தொழிற்சாலை, பூச்சி மருந்து கம்பெனிகள், சர்க்கரை தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி நிலையங்களில் பணி வாய்ப்பு கிடைக்கிறது.

இது தவிர சுயதொழிலும் செய்யலாம். போட்டித் தேர்வுகளில் மிக எளிதாக வெற்றிப் பெறலாம். போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வேளாண் படிப்புகளில் உள்ளன. அதனாலே, 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தால் வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேளாண் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. சிறப்பாக படிக்கும் பெரும்பான்மை மாணவர்களின் முதல் தேர்வாக எம்பிபிஎஸ் படிப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் இன்ஜினிரிங் படிப்பு இருந்தது.

ஆனால், பொறியியல் படிப்பை காட்டிலும் மாணவர்கள் மத்தியில் தற்போது வேளாண் படிப்புகளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் இன்னும் வேளாண் கல்லூரிகள் இல்லை. அதனால், கூடுதல் வேளாண் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.

வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: "அடிப்படையில் மனித இனம் உயிரோடு இருப்பதற்கு உணவு முக்கியமானது. 1947-ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 120 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், உணவு தயாரிப்பதற்காக அன்று இருந்த விளை நிலங்களில் தற்போது 60 சதவீதம்தான் தற்போது இருக்கிறது. மீதமுள்ள விளைநிலங்கள், ரோடு, விமானநிலையம், குடியிருப்புகள், ஆக்கிரமிப்பு காரணமக குறைந்துவிட்டது. மழையும் சீராக பெய்வதில்லை.

நீர் ஆதாரமும் (Aquifers) குறைந்துவிட்டது. அதனால், விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. நிறையை இடங்களில் உவர் நிலங்கள், கலர் நிலங்கள் போன்ற பயன்படுத்த முடியாத நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதனால், 120 கோடி மக்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வது எதிர்காலத்தில் பெரிய சவாலாக திகழும்.

நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 750 விவசாயிகள், விவசாயம் மீது நம்பிக்கையில்லாமல் மாற்றுத்தொழிலுக்கு செல்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, விவசாயத்தை தொழில் நுட்பத்தால் மேம்படுத்தினால் மட்டுமே உண்டு. குறைவான விளைநிலம், குறைவான நீர், குறைவான வேலையாட்களை கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு வேளாண் பட்டதாரிகள் அதிகளவு தேவைப்படுகிறார்கள். வேளாண்மை படிப்பால் மட்டுமே விவசாயத்தை தூக்கி நிறுத்த முடியும்.

விவசாயம் இல்லாமல் தொழில்துறை வளர வாய்ப்பில்லை. ஏனென்றால் எந்த ஒரு மூலப்பொருளும் விவசாயத்தில் இருந்துதான் கிடைக்கப்பெறுகிறது. நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். விவசாயிகளை காக்க வேண்டும் என்று சொல்கிற நமது நாட்டில்தான் ஒரு விவசாயியின் மகன் தான் நினைத்த விவசாயப் படிப்பு படிக்க முடியாமல் போகிறது. அதற்கு வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும்." என்று வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

விவசாய கல்லூரி தொடங்க என்ன தேவை?

ஒரு வேளாண்மை கல்லூரி தொடங்குவதற்கு குறைந்தப் பட்சம் 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதில், நிலத்தடிநீர் ஆதாரத்துடன் கூடிய 80 சதவீதம் விளைநிலம் இருக்க வேண்டும். நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருக்க வேண்டும். காடு வளர்ப்பு, தோட்டப்பயிர்கள் வளரக்கூடிய சூழல் இருக்க வேண்டும். ஆய்வுக்கூட வசதிகள், வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் விவசாயப்பயிற்சி அளிக்க முடியும்.

ஆனால், தற்போது அமையும் பெரும்பான்மை வேளாண் கல்லூரிகள், தரமான பேராசிரியர்கள், கட்டிட வசதி, விளைநிலங்கள் வசதியில்லாமல் அமைகின்றன. அதனால், மாணவர்களுக்கு வெறும் வகுப்பறை கல்வி மட்டுமே கற்றுக்கொடுத்து காகித சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், தரமில்லாத வேளாண்பட்டதாரிகள் உருவாகி கொண்டிருக்கின்றனர். வேளாண் படிப்புகளுக்கு மவுசு இருக்கிறது என்பதற்காக புற்றீசல் போல் தரமில்லாமல் கல்லூரிகள் அமைவதை தடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

18 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்