சென்னை: புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், கணிதம் மூலம் 'அவுட் ஆஃப் தி பாக்ஸ்' (Out of the Box Thinking) என்ற பாடத்திட்டத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) அறிமுகப்படுத்த உள்ளது. 10 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு முன்முயற்சி நாட்டிலேயே முதன்முறையாகும்.
ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், ஐஐடி மெட்ராஸ்-ன் செக்.8 கம்பெனி (IITMadras Pravartak Technologies Foundation, sec 8 company of IIT Madras) மூலம் கட்டணமின்றி ஆன்லைனில் இந்தப் பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதுடன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள மையங்களில் இறுதித் தேர்வு நடத்தப்படும்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைவருக்கும் ஆன்லைன் முறையில் இலவசமாகப் பாடத்திட்டம் கிடைக்கிறது. நான்கு நிலைகளாக நடைபெற உள்ள இந்தப் பாடத்திட்டம் மாணவர்கள், பயிற்றுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகக் கூடியதாக இருக்கும்.
பாடத்திட்டத்தின் முதலாவது பேட்ச் ஜூலை 1, 2022 அன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு 24 ஜூன் 2022 அன்று நிறைவடையும். ஆர்வமுள்ளவர்கள் https://www.pravartak.org.in/out-of-box-thinking.html இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பாடத்திட்டங்களின் அவசியம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள இப்பாடத் திட்டம் வரவிருக்கும் நாட்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்த பாடத்திட்டத்தின் பலன்களைக் காண முடியும். கட்டணம் ஏதுமின்றி பாடத்திட்டத்தை கிடைக்கச் செய்திருக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருமளவில் பயன்கிடைக்கச் செய்யும்.
“அவுட் ஆஃப் தி பாக்ஸ்' சிந்தனை என்பது மறைமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகும். தெளிவான காரணங்கள் உடனடியாகத் தெரியாத நிலையில், பாரம்பரிய முறைப்படி தர்க்கரீதியாக அடுத்தடுத்த படிகளில் கிடைக்காத யோசனைகள் இந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. கணிதத்தின் கண்டறியப்பட்ட மற்றும் அறியப்படாத உண்மைகளை தர்க்கரீதியாகவும், விரிவாகவும் ஆர்வத்துடன் கண்டுபிடிப்பதன் மூலம் அத்தகைய சிந்தனை வலியுறுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கணித சிக்கல்களைத் தீர்க்கும் திறன் உண்டு என்ற நினைப்பைப் போக்கும் வகையில், இந்த பாடத்திட்டம் பல்வேறு விதமான அணுகுமுறைகளை முன்வைக்கிறது. புதிய நுட்பங்களை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாணியில் அறிமுகப்படுத்துவதுடன், நிஜவாழ்க்கையில் எந்த திட்டத்தையும் தன்னம்பிக்கையோடு எளிதில் எதிர்கொள்ள பயனர்களைத் தயார்படுத்தும்.
கணிதப் படிப்பில் தர்க்கவியல்தான் அடிப்படை என்பதால், விரிவடைந்து உள்ள தொழில்நுட்ப உலகில் அதன் பயன்பாட்டின் மூலம் பரந்த சிந்தனையை வளர்ப்பது அவசியமாகிறது. வேடிக்கையான சுடோகு (Sudoku) புதிரைத் தீர்ப்பதில் இருந்து திட்டமிடப்பட்ட மிக முக்கியமான திட்டத்தை முடிப்பது வரை, தொடர்புடைய எண்கணிதத்தைவிட தர்க்க ரீதியாக சிந்தித்தல் முக்கியமானது. இதற்குத் தேவைப்படும் ஆக்கப்பூர்வ சிந்தனை மற்றும் பரந்த கருத்துதான் “அவுட் ஆஃப் தி பாக்ஸ்” சிந்தனை என்று அழைக்கப்படுகிறது.
கணிதக் கல்வியாளரும், ஆர்யபட்டா கணித அறிவியல் கல்வி நிறுவனத்தின் நிறுவனர்-இயக்குனரான சடகோபன் ராஜேஷ் இந்த பாடத்திட்டங்களைக் கற்றுக் கொடுக்க உள்ளார். பள்ளி முதல் கல்லூரி வரை பல்வேறு நிலைகளில் படிக்கும் 10 வயதிற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளாக இவர் கணிதப் பாடத்தைக் கற்பித்து வருகிறார். அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் விதவிதமான பாடத்திட்டங்களை உருவாக்கி பயிற்றுவித்து வருகிறார். கணித சிக்கல்களுக்கு தீர்வு காணும் முறைகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தி கணிதம் உள்ளிட்ட பல்வேறு ஒலிம்பியாட் போட்டிகளுக்குத் தயார்படுத்தி இருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago