பள்ளி மேலாண்மை குழுவில் புரவலர்களை நியமிக்க தடை: பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், அதன் செயல்பாடுகளை நிர்வகிக்கவும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கிய பங்காற்றுகிறது. இதன் உறுப்பினர்களாக பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 20 பேர் இருப் பார்கள்.

இந்நிலையில், இக்குழு உறுப்பினர் நியமனத்தில் தற்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மேலாண்மைக் குழுவுக்காக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, குழு உறுப்பினராக இருக்க புரவலருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கல்வி ஆர்வலர்,அரசுசாரா அமைப்பு நிர்வாகி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆகியோரில் ஒருவர் மட்டுமே உறுப்பினராக இருக்க வேண்டும். அவர் பள்ளியை சுற்றிய குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ‘இல்லம்தேடி கல்வி’ திட்டத்தில் சிறப்பாகசெயல்படுபவராகவும், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும் இருந்தால் போதும்.

இதுதவிர, நகர்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் வார்டு எல்லைக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தால், அவர் அனைத்து பள்ளிகளின் மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினராக இருக்கலாம். பள்ளியில் மாணவர் சேர்க்கை மிக குறைவாக இருந்தால், குழுவில் பெற்றோர் எண்ணிக்கையை சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE