கல்விக் கொள்கையில் எங்கே இருக்கிறது இந்தியா?

By ம.சுசித்ரா

சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும் அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை அடைவதற்குமான வழிமுறையே கல்வி.

இன்று நம் முன்னே உருவெடுத்திருக்கும் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை 2019 இத்தகைய இலக்கைப் பூர்த்திசெய்யுமா? கல்வி அளிப்பதில் உலகின் தலைசிறந்தவையாகக் கருதப்படும் சில நாடுகளின் கல்விக் கொள்கையோடு இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை ஒப்பிடும்போது நாம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

நெகிழ்வாக, மகிழ்வாகக் கற்கும் சூழலை இந்தியக் கல்வி நிலையங்களில் உருவாக்க வேண்டும் என்பது நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை 2019 வரைவிலும் இதற்கான முன்னெடுப்புகள் அழுத்தமாகக் காணப்படுகின்றன. இதன்பொருட்டு மனப்பாடக் கற்றல் முறையிலிருந்து செயல்வழிக் கற்றலுக்கு மாறுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த ஆவணம்.

அதேநேரத்தில் சிறந்த கல்வி முறையை எதிர்நோக்கிய பயணத்தில் கற்றல் முறை ஒரு பரிமாணம் மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டுகிறது சர்வதேசக் கல்வித் தரம் குறித்த பியர்சன் மதிப்பீட்டு ஆய்வறிக்கை.

ஓய்வுக்கான நேரம்

தரமான கல்வியை உறுதி செய்வதில் ஓய்வுக்கு மிக முக்கியப் பங்கிருப்பதாக இவ்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்னுதாரணம், பின்லாந்து. ஒரு கல்வியாண்டில் தோராயமாக 1,080 மணி நேரம் பெரும்பாலான நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டி இருக்கிறது.

ஆனால், பின்லாந்திலோ வெறும் 600 மணி நேரத்துக்கு மட்டுமே பள்ளிகள் பாடம் கற்பிக்கின்றனவாம். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் போதுமான ஓய்வுநேரம் அளிக்கப்படுவதால் அவர்களால் திறம்படக் கற்பித்தலுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடிகிறது.

நாளொன்றுக்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே அங்கு நடை பெறுகின்றன. மாணவர்களுக்குப் பலமுறை உணவு இடைவேளை கொடுக்கப்படுகிறது. ஓய்வெடுக்கவும் கேளிக்கைக்குமான இடைவேளை தினந்தோறும் உண்டு. ஆசிரியர்களின் பணிச் சுமையைத் தளர்த்த பள்ளி வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஆசிரியர் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

அங்கு ஓய்வெடுப் பதற்கு ஏதுவான இருக்கைகள், பாடம் நடத்தத் தயாராவதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோல சிங்கப்பூரிலும் ‘உணவு+உடற்பயிற்சி+தூக்கம்’ என்ற திட்டம் தொடக்கப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 2017 முதல் பின்பற்றப்பட்டுவருகிறது.

அரசா, தனியாரா?

ஆஸ்திரியா, பல்கேரியா, செக் குடியரசு, பிரான்சு, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, போர்ச்சுகல், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் அரசு அல்லாத தனியார் நிறுவனங்களும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கின்றன.

அதேநேரத்தில் எந்தெந்த அமைப்பினர் எத்தனை சதவீதம் வரை தலையிடலாம் என்பது திட்டவட்டமாக அங்கே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நமது புதிய கல்விக் கொள்கை 2019-ல் இவற்றின் பங்கேற்பு குறித்த விவரங்கள் மங்கலாகக் காணப்படுவதால் கல்வி முற்றிலும் தனியார்மயமாகக் கூடுமோ என்ற அச்சமும் பதற்றமும் எழுகின்றன.

தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கி யிருக்கும் பள்ளிகளுக்குச் சிறந்த முறையில் செயல்பட்டுவரும் பள்ளிகள் தங்களுடைய ஆசிரியர் களின் சேவையைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் சீனாவின் ஷாங்காய் நகரப் பள்ளிகளில் உள்ளது. இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் கல்வித் தரத்தில் சமநிலையை எட்ட சீனா முயல்கிறது.

நமது புதிய கல்விக் கொள்கையிலும் இதே சாயலில் ‘School complex’ என்ற திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. படிப்பில் மட்டுமின்றி கலை, விளையாட்டு தொடர்பான சாதனங்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் திட்டம் இது. ஆனால்,  அரசுப் பள்ளிகளைக் கபளீகரம் செய்வதற்கான அபாயம் இதில் ஒளிந்திருப்பதாகக் கல்வியாளர்கள் கவலைகொள்கின்றனர்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற பள்ளிகள் என்ற அந்தஸ்து கொண்ட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இந்தப் பள்ளிகளுக்குரிய ஆசிரியப் பணி நியமனம், பாடத்திட்ட வடிவமைப்பு, கல்விக் கட்டணம், நிறுவனச் செயல்பாடுகளை நிர்வகிக்க அந்தந்தப் பகுதிகளுக்கு அரசின் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

கல்வியைப் பொறுத்தமட்டிலும் நிதி ஒதுக்கீட்டிலும் நீதி எதிரொலித் தால் மட்டுமே திட்டம் நிறைவேறும். அந்த வகையில் 20 சதவீத நிதியைக் கல்விக்கு ஒதுக்கி உலக வரைபடத்தில் தனக்கெனத் தனி இடம் பிடித்திருக்கிறது குட்டி நாடான சிங்கப்பூர். அதற்கான பலன் கல்வி நிறுவனங்களின் உலகத் தரவரிசைப் பட்டியலிலும் பளிச்சிடுகிறது.

தேர்வுமுறை

மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக இந்தியாவில் தேர்வுமுறை செயல்பட்டுவருவதை மாற்றும் முனைப்புடன் பல்வேறு பரிந்துரை களை நமது புதிய கல்விக் கொள்கை வழிமொழிகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்காமல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி வடிவமைக்கும் பொது நுழைவுத் தேர்வை உயர்கல்வி படிக்க விரும்பும் அத்தனை மாணவர்களும் எழுதும் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. எனினும், 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை நடத்தப்பட்டுவரும் பல அடுக்குத் தேர்வுகளில் எத்தகைய மாற்றம் கொண்டுவரப்படும் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் ஆசியாவின் கல்வித் தலைநகரமாகக் கொண்டாடப்படும் சிங்கப்பூர் முன்வைத்திருக்கும் 2019-ம் ஆண்டுக்கான தேர்வுத் திட்டம் அசத்துகிறது. ஒன்றாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்குக் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு போன்ற எத்தகைய தேர்வையும் இனி நடத்தப்போவதில்லை; மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்புகளிலும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என முடிவெடுத்துள்ளது.

புதியன படிக்கவும் படைப் பாற்றலை வளர்க்கவும் துளிர் பருவத்தினருக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் போதுமான கால அவகாசம் தேவை என்பதால் இத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது சிங்கப்பூர்.

ஒரே சல்லடையில் சலித்து அறிவாளிகளை வடிகட்டி எடுக்கப் பல பொதுத் தேர்வுகளோ தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளோ பின்லாந்தில் கிடையாது.

மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது ஒரே ஒரு தேசிய மெட்ரிக் தேர்வு மட்டும்தான் அங்கு நடத்தப்படுகிறது. மற்றபடி மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பொறுப்பு அந்தந்த ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை,  நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக 2020 முதல் கலை, அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட எந்த உயர் கல்வியையும் பயில எத்தனிக்கும் ஒவ்வொரு இந்திய மாணவரையும் பொது நுழைவுத் தேர்வை எழுதச் சொல்கிறது.

சிறப்புக் கவனம்

தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் மதிய உணவுத் திட்டத்தைப் போலவே பின்லாந்தில் அனைத்து மாணவர் களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி மருத்துவ சேவையும், தனிப்பட்ட கவனமும் வழிகாட்டலும் உளவியல் ஆலோசனைகளும் பின்லாந்தின் ஒவ்வொரு மாணவருக்கும் அளிக்கப்படுகிறது.

குழந்தை குழந்தையாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது பின்லாந்து. ஆகையால் அங்கு ஏழு வயதில்தான் பள்ளியில் குழந்தைகளை அனுமதிக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டுவருகிறது. அதேநேரத்தில் கட்டாய இலவசப் பள்ளிக் கல்வி வலியுறுத்தப்படுகிறது. அங்குப் பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மாணவருக்கு ஒன்பது ஆண்டுகள் மட்டுமே.

உயர்கல்வியைப் பொறுத்த மட்டில் நம்மைப் போன்று அவர்களும் பள்ளி பொதுத் தேர்வை முடித்த பிறகே உயர்கல்வியில் அடியெடுத்து வைக்க முடியும். அதேநேரத்தில் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளும் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறைப் படிப்புகளுக்கு இணையாக மதிக்கப்படுகின்றன.

குறைவான வீட்டுப்பாடம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் 1-ம், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது என்ற தீர்ப்பைச் சென்னை உயர் நீதி மன்றம் அளித்து ஓராண்டு கடந்து விட்டது. ஆனால், இன்னமும் நம்முடைய தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் அன்றாடம் மணிக்கணக்கில் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வேறு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், உலக நாடுகளில் மிகக் குறைவான நேரம் வீட்டுப் பாடம் தரும் நாடாக பின்லாந்து திகழ்கிறது. நாளொன்றுக்கு அதிகபட்சம் அரை மணிநேரம் மட்டுமே அந்நாட்டு மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்ய வேண்டியுள்ளது.

சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் வழக்கம் என்பது அங்கு அறவே கிடையாது. ஆனாலும், கல்வி என்னும் ராஜ்ஜியத்தில் ஆண்டுதோறும் பின்லாந்து மாணவர்களுக்குத்தான் சிம்மாசனம் கிடைத்துவருகிறது

ஆசானின் இடம்

இந்தியாவைப் போல இங்கிலாந்தி லும் பள்ளி மாணவர்களின் எழுத்தறிவு, கணித அறிவு குறித்த பெரும் கவலை நிலவுகிறது. இதைச் சீர்படுத்த இந்தியக் கல்விக் கொள்கை சொல்வதுபோல அவர்கள் உள்ளூர் பயிற்சியாளர்களுக்குக் கதவைத் திறந்துவிடவில்லை.

கற்பித்தல் முறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து அதற்குரிய பயிற்சிகளை அரசு நியமித்த ஆசிரியர்களுக்கு வழங்கிவருகிறது இங்கிலாந்து. பின்லாந்திலோ உச்சபட்ச சம்பளம் வழங்கும் பணிகளில் முதலாவதாக ஆசிரியர் பணிதான் உள்ளது.

மாணவர்களை மனிதர்களாக வளர்த்தெடுப்பதற்கான தூண்டுகோலாக எங்கு கல்வி கையாளப்படுகிறதோ அங்குதான் மாற்றமும் முன்னேற்றமும் சாத்தியப்படும். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்த இலக்கு இந்தியாவுக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை நீங்களே சொல்லுங்கள்!

கட்டுரையாளர் தொடர்புக்கு:

susithra.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

மேலும்