தி
ரைப்பட நடிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் அவதாரப் புருஷர்களாக்கி அடிமை சாசனம் கொடுக்காமலேயே அவர்களுக்கு ‘கட்டப்பா’ வேலை செய்யும் தேசம் இது. இங்கு மக்களுக்கான அறிவியல் பாதையைச் செப்பனிட்ட இந்திய அறிவியலின் இரண்டு தூண்கள் அடுத்தடுத்து நம்மை விட்டு மறைந்தது பற்றிப் பெரிய அதிர்ச்சியை எதிர்பார்ப்பது தவறுதான்! மின்விளக்கின் சுவிட்சை ப்போடும்போதெல்லாம் எடிசனை நினைக்கிறோமா என்ன?
இரண்டு தூண்கள்
இந்தியாவின் செயற்கைக்கோள் கனவுகளைத் தகவல் தொழில்நுட்ப மயமாக்கி வெகுஜனப் பயன்பாடாக மாற்றியவர் யு.ஆர்.ராவ். இந்தியாவில் கிராமம்தோறும் ஒரு தொலைகாட்சிப் பெட்டியைச் சாத்தியமாக்கியவர் பேராசிரியர் யஷ்பால். சிக்கலான அறிவியல் சித்தாந்தங்களைக்கூட எளிமையாக விவரிக்கும் தனித்துவம் கொண்ட அறிவியல் அறிஞர் அவர். இத்தகைய அறிவியலின் இரண்டு தூண்களை ஒரே நாளில் (ஜூலை 24) இழந்து நிற்கிறது இந்தியா.
அறிவியல் ஜாம்பவான்
கர்நாடகத்தில் அடமாறு கிராமத்தில் 1932-ல் பிறந்தவர் உடுப்பி ராமச்சந்திர ராவ். உடுப்பி கிறித்துவப் பள்ளியில் படித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை இயற்பியல் பட்டமும் காசியில் முதுநிலை இயற்பியலும் முடித்தார். விக்ரம் சாராபாய்க்குக் கீழ் விஞ்ஞானியாகி சூரியமின்காந்தப் புயல் காரணமாகப் புவியின் காந்தப்புலம் எவ்வாறு பாதிக்கப்படும் என ஆய்வுசெய்தார். 1960-களிலேயே அதுகுறித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு உலக அரங்கில் சூரியமின்காந்தப்புயல் அறிவியலைத் தொடங்கிவைத்தார்.
முப்பது மாத கெடு
விக்ரம் சாராபாய் காலமான பிறகு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மூலம் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவைத் தயாரிக்கும் குழுவை நியமித்தார். அதை வெற்றிகரமாகச் செயலாற்ற 1973-ல் அக்குழுவின் தலைவராக யு. ஆர். ராவை நியமித்தார்.
30 மாதங்களில் செயற்கைக்கோளைத் தயாரிக்க ராவுக்குக் கெடுவைத்தார். தனது முழுமையான ஈடுபாட்டாலும் கச்சிதமான தலைமைப் பண்பின் மூலமாகவும் 15 மாதங்கள் 6 நாட்களில் அதைச் செய்துமுடித்தார் ராவ். ஆரியபட்டாவை 1975 ஏப்ரல் 19 அன்று சோவியத் நாட்டின் ராக்கெட் தளத்திலிருந்து விண்ணில் செலுத்தித் தனது சொந்தச் செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்திய 7-வது நாடாக இந்தியாவைத் தலைநிமிரவைத்தார்.
எஸ்.டி.டி (STD) எனும் வகைத் தொலைபேசி சேவை யு.ஆர். ராவின் மிகப் பெரிய பங்களிப்பு. ஏ.எஸ்.எல்.வி., எஸ்.எல்.வி .என அடுத்தடுத்து உள்நாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்கி பாஸ்கரா, ரோகிணி, இன்சாட் எனக் கல்வி, வெகுஜனத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைத் திட்டங்களாக்கியவர்.
அவரது அற்புதங்களில் ஒன்று புவி மையச் செயற்கைக்கோள் ஆப்பிள். வாழ்நாள் முழுவதும் துகள் இயற்பியலாளராக 300-க்கும் மேற்பட்ட முதல் தரமான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார். ‘விண்வெளி ஆய்வும் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியும்’ என்ற அவருடைய புத்தகத்தைச் சீனப் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைத்திருக்கிறார்கள். ராக்கெட் அனுப்பிவிட்டுக் கோவிலுக்குச் சென்று மொட்டைபோடும் ‘விஞ்ஞானி’ அல்ல அவர். தேர்ந்த அறிவியல்வாதி!
அறிவியல் போராளி
மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்ட ஒரு தேக்கரண்டி பால் எடுத்து செய்முறைவிளக்கம் காட்டி இது பாலின் மேற்பரப்பு இழுவிசை மற்றும் சிலையின் நுண்துள் தந்துகி கவர்ச்சி என்று அறிவியல் விளக்கமளித்தார் பேராசிரியர் யஷ்பால். அதன்மூலம் அன்றைய பரபரப்பையும் ஒருவித மோசடியையும் முடிவுக்குக் கொண்டுவந்தவர் அந்த இயற்பியல் விஞ்ஞானி.
உலக அளவில் காஸ்மிக் அலைகளுக்கான துகள் இயற்பியல் வல்லுநர்களில் முதன்மையானவர் என்ற பெருமைக்கு உரியவரான யஷ்பல் சிங் 1926-ல் பஞ்சாபில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1958-ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் (Space Application Center) தலைவரானார்.
வீட்டுக்கு வீடு டி.வி.
1972-ல் இந்திய விண்வெளி ஆய்வை வெகுஜனக் கல்விக்குப் பயன்படுத்தும் சைட் (SITE-Satellite Instructional Television Experiment) எனும் திட்டத்தை முன்மொழிந்தார். கிராமம்தோறும் தொலைக்காட்சி எனும் சீரிய முயற்சிக்காகச் செயற்கைக்கோள் பயன்பாட்டு மையங்களை ஏற்படுத்தினார். ஏ.டி.எஸ்.-6 ரகத் தகவல் தொழில்நுட்பச் செயற்கைக்கோள் வழியே பிகார், ராஜஸ்தான் உட்பட 17 மாநிலங்களில் தொலைக்காட்சி சேவை ஏற்படுத்தி இந்தியாவைத் தொலைக்காட்சி கொண்ட நாடாக்கிய பெருமை விஞ்ஞானி யஷ்பாலைச் சாரும்.
தாய் மொழியில் மருத்துவக் கல்விக் கனவு!
கல்வி மிகுந்த சுமையாக மாறியதைத் தொடர்ந்து 1991-ல் யஷ்பால் தலைமையில் சுமையற்ற கற்றல் கல்வி குழு அமைக்கப்பட்டது. 1993-ல் அவர் கொடுத்த மாற்றுக் கல்வி குறித்த அற்புதமான ஆவணம் இன்றும் நமக்கு வழிகாட்டியாக உள்ளது. ‘திருப்பு முனை’ (Turning Point) எனும் தொலைக்காட்சி அறிவியல் தொடர் மூலம் மக்களுக்கு எளிமையான, சுவாரசியமான வடிவில் அறிவியல் வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தினார்.
தனியார் கல்வியைக் கடுமையாய் விமர்சித்து இறுதிவரை அதை எதிர்த்தார். யார் வேண்டுமானாலும் பல்கலைக்கழகம் தொடங்கலாம் எனும் சத்தீஸ்கர் மாநிலச் சட்டத்தை எதிர்த்து 2002-ல் உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு மிகப் பிரபலம். ஏழை மாணவர்களுக்காக வாதாடி 112 தனியார்ப் பல்கலைக்கழகங்களை 2005-ல் மூடிட உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்றுத் தந்தார். அவர் தலைமையில் அமைந்த உயர் கல்வி குறித்த கல்விக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று தாய் மொழியில் மருத்துவ, பொறியியல் கல்வி என்பது. இன்னும் நிறைவேற்றப்படாத கனவு!
அறிவியல் மேதைகள்
இந்தியாவின் முதல் ராக்கெட் அனுப்பப்பட்ட நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. இது குறித்து நம் பாடப் புத்தகங்கள் மௌனம் சாதிப்பது மிகவும் வேதனையானது.
1963, நவம்பர் 21-ல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டான ‘அச்சபே’ தும்பாவிலிருந்து ஏவத் தயார்செய்யப்பட்டது. அப்போது அதிபர் ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி உலகை உலுக்கியது. ராக்கெட் அனுப்பும் திட்டத்தை ஒத்திவைக்கப் பலரும் முயன்றனர். அப்போது, மக்கள் வரிப் பணத்தால் உருவான திட்டம் திட்டமிட்டபடி நடப்பதே சிறந்தது என விக்ரம் சாராபாயை இணங்கவைத்தார் யு.ஆர்.ராவ்.
மறுபுறம், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மனிதவள அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி பசுமாட்டின் சிறுநீரில் உள்ள அபூர்வத் தன்மைகளை ஆராய பல கோடி ரூபாய் ஆராய்ச்சித் திட்டத்தை அறிவித்தார். அப்போது, பதவிக்காகப் பயந்து மௌனம் சாதிக்காமல் கடுமையாக அத்திட்டத்தை விமர்சித்து எதிர்த்து எழுதியவர் பேராசிரியர் யஷ்பால்.
இறுதிவரை மக்கள் விஞ்ஞானிகளாக இருந்த இரண்டு உண்மையான மேதைகளை நாடு இழந்து நிற்கிறது. இன்று நம்மை பெரும் நச்சு வளையமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் மத – அடிப்படைவாத இருளைக் கடக்க இதுபோன்ற அறிஞர்களின் அறிவியல்பூர்வ வாழ்க்கைப் பாதை மட்டுமே நமக்கு வழிகாட்ட முடியும் என்று நினைக்கும்போது மனம் விம்முகிறது.
- கட்டுரையாளர், எழுத்தாளர், ஆசிரியர்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
கல்வி
8 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago