வே
லைவாய்ப்புப் பந்தயத்தில் அதிவேகமாக ஓடி உலகச் சந்தையில் இடம்பிடிக்கும் மாணவர்களைத் தயார்படுத்துவது மட்டுமல்ல கல்வியின் இலக்கு. எல்லோரையும் முந்திச் செல்லும் முனைப்பைக் காட்டிலும் வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பான்மையை உருவாக்க வேண்டியதே கல்வியின் முக்கிய நோக்கம். இதைச் சரியான நேரத்தில் உணர்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எடுத்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தைச் சீரமைக்கும் பயிலரங்கம் சமீபத்தில் நடத்தப்பட்டது.
உணர்வுரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் சமூக நீதியைப் புரிந்துகொள்வது, சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தருவது, குடிமக்களின் அடிப்படை உரிமைகள், கடமைகளைக் கற்பிப்பது, மதச்சார்பின்மை, இந்திய அரசியலின் இன்றைய நிலை உள்ளிட்ட தலைப்புகளில் இதில் ஆசிரியர்களுக்குத் துறை வல்லுநர்கள் பயிற்சி வழங்கினர். அதிலும் கவனிக்கத்தக்கவகையில் ‘மாணவர்களுக்கு இடையில் சமத்துவம்’ கற்பிக்கும் முறையை ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் பயிலரங்கம் நடைபெற்றது.
“சட்டரீதியாகச் சமத்துவத்தைக் கற்பிப்பது வேறு, எல்லோரும் சமம் என்கிற உணர்வை மாணவர்கள் மனதில் பதியவைப்பது என்பது வேறு. இந்தப் பயிலரங்கத்தில் பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு இடையில் சமத்துவம் என்கிற கருத்தியலை எப்படி உணர்வுரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் கற்பிக்கலாம் என்பதை ஆசிரியர்களுக்குக் கற்பிக்க முயன்றேன்” என்கிறார் இத்தலைப்பைக் கையாண்ட ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் முனைவர் அருணாசலம்.
நீதிக் கதைகளில் நீதி போதவில்லை!
நீதிக் கதைகள் மூலமாக வாழ்க்கையின் விழுமியங்களைக் குழந்தைகளுக்குப் புகட்டும் கல்வி முறை நெடுங்காலமாக நம்மிடையே இருந்திருக்கிறது. ஆனால், அத்தகைய கதைகளில்கூடப் பன்முகத்தன்மைகளை ஏற்றுக்கொண்டு சமத்துவத்தை முன்னிறுத்தும் பாங்கு இருந்திருக்கிறதா? சரி / தவறு, நன்மை / தீமை, உண்மை / பொய் போன்ற விழுமியங்களைக் கடந்து மிக நுணுக்கமானது ‘சமத்துவம்’. ஆண் / பெண் / மாற்றுப் பாலினத்தவர், பணக்காரர் / ஏழை, ஆதிக்கச் சாதி / இடை சாதி / ஒடுக்கப்பட்ட சாதி, மத வேறுபாடுகள், நிறப் பாகுபாடுகள், சாதாரண உடலமைப்பு கொண்டவர் / மாற்றுத்திறனாளி, என விரிந்துகொண்டே போகும் சிக்கல்களை வெறுமனே நீதிக் கதைகளை வைத்து மட்டும் களைய முடியாது. இத்தகைய நிலையில் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றாற்போலச் சமத்துவம் என்கிற தலைப்பைப் பல அடுக்குகளில் கையாள வேண்டும்.
பல அடுக்குகளில்...
பரீட்சையில் மதிப்பெண் குவிப்பதற்காகக் கற்றுத்தரும் வழக்கமான பாடம் அல்ல சமத்துவம். வகுப்பறையில் விரிவுரை ஆற்றி இதைக் கற்பிக்க முடியாது. குழந்தைகளை ஈர்த்து அவர்களுக்கு ஆர்வம் உண்டாக்கும் வழிமுறைகளை வடிவமைக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களின் ஈடுபாடு மிகவும் இன்றியமையாதது.
“நாளிதழ்களில் வெளியாகும் சமூக நிகழ்வுகளை விவாதப் பொருளாக வைத்து மாணவர்களுக்கு இடையில் குழு விவாதம் நடத்துவது, சமூகச் சிக்கல்களைக் காட்சிப்படுத்தும் திரைப்படங்கள், ஆவணப்படங்களைத் திரையிட்டுச் சமூக நீதி குறித்த கலந்துரையாடல் நடத்துவது, நாளிதழ்களில் வெளியாகும் முக்கியமான அரசியல் கேலிச்சித்திரங்களைக் காட்சிப்படுத்தி அதற்குப் பின்னால் உள்ள பல விஷயங்களை விவாதிப்பது, சமூக அக்கறை சார்ந்த தலைப்புகளில் ஒளிப்படங்கள் எடுக்க; ஓவியம் வரைய, குழுவாக நாடகம் இயற்றி நடிக்க மாணவர்களை ஊக்குவிப்பது, முதியோர் இல்லம், சிறைச்சாலை, மனநல மருத்துவம், பின்தங்கிய கிராமம், தொண்டு நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல் இப்படிப் பல அடுக்குகளில் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். முக்கியமாக அத்தனை செயல்களையும் குழுவாக இணைந்து மாணவ-மாணவிகள்-மாற்று பாலினத்து மாணாக்கர் செயல்பட ஊக்குவிக்க வேண்டும்” என்கிறார் அருணாசலம்.
எல்லாவற்றையும்விட ஆண் / பெண் / மாற்றுப் பாலினத்தவர் சமத்துவத்தை உணர்த்தத் தொடர்ந்து படைப்பாற்றலோடு நம்முடைய ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும். அதற்கு நம்முடைய பள்ளி வகுப்புகளில் அவர்கள் நட்பு பாராட்ட வேண்டும். பாலினம் கடந்து எல்லாக் குழந்தைகளும் இணைந்து குழுவாக இயங்க அனுமதிக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் தரும் ‘சமத்துவம்’ என்ற சித்தாந்தத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வெவ்வேறு விதமாக இடைவிடாது பயிற்றுவிக்க வேண்டும். இந்த மாற்றத்துக்கான திட்டத்தில் பெற்றோருக்கும் சமத்துவத்தைக் கற்பிப்பது அத்தியாவசியம் என்பதை நம்முடைய கல்வி அமைப்பு உணர வேண்டும். ஏனென்றால் ஆசிரியர் – மாணவர் – பெற்றோர் என்கிற சங்கிலித் தொடரில் இருக்கும் அனைவரும் ஒன்றை உணர்ந்தால் மட்டுமே சமூகத்தில் சமத்துவம் சாத்தியமாகும்!
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
கல்வி
5 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago