ஒ
ரு படத்தின் கதையோட்டத்தை முடிவுசெய்வது எடிட்டிங்தான். அந்த வகையில் ‘ஆரண்ய காண்டம்’, ‘சென்னை 28’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘பசங்க-2’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டவர் எடிட்டர் ப்ரவீன் கே.எல். எடிட்டிங் துறை சார்ந்த படிப்புகள், வேலைவாய்ப்பு குறித்து அவரிடம் பேசியதிலிருந்து...
தற்போது எடிட்டிங் துறையில் வேலைவாய்ப்பு எப்படியிருக்கிறது?
எடிட்டிங் துறையில் வேலை வேண்டுமென்றால் தொலைக்காட்சி அல்லது திரைப்படம் மட்டும்தான் என்றில்லாமல் இன்று பல புதிய விஷயங்கள் வந்துள்ளன. அதனால், நிறைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இணையத் தொடர், திரைப்பட முன்னோட்டம் என எடிட்டிங்கில் பல்வேறு பணிகள் வந்திருக்கின்றன. முன்பு 10 பேருக்கு மட்டுமே வாய்ப்பு என்று இருந்த இத்துறை இன்று 50 பேருக்கு வாய்ப்பளிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
எடிட்டிங் பணிக்கு என்ன படித்திருக்க வேண்டும்?
முன்பெல்லாம் கல்லூரிப் படிப்பு இல்லையென்றாலும்கூட ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இன்றைய சூழலில் எடிட்டருக்கு அடிப்படைப் படிப்பறிவு அவசியம். ஏனென்றால் படக்குழுவினரிடம் ஏன் இந்தக் காட்சியை நீக்கினேன், ஏன் இந்தக் காட்சியை இப்படி எடிட் செய்திருக்கிறேன் என மனதுக்குள் நினைப்பதை எடுத்துச்சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கு அடிப்படைப் படிப்பறிவு கண்டிப்பாகத் தேவை. எடிட்டிங்கைப் பற்றித் தெரிந்துகொள்ள நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், அதைப் படிப்பதற்கு முன்பாக ஏதோ ஒரு பட்டப்படிப்பை முடித்திருப்பது நல்லது.
படிப்பைத் தவிர்த்துப் படங்கள் மீது பேரார்வம் வேண்டும். ஒரே படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தால் மட்டுமே ‘சத்தம் ஏன் இந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது’ போன்ற பல விஷயங்கள் எடிட்டிங்கின்போது புரியும். படங்கள் பார்த்துத்தான் எடிட்டிங்கின் பல நுணுக்கங்களை நான் கற்றுக்கொண்டேன்.
நிறையப் பொறுமை, ஒரு பட்டப்படிப்பு, தொழில்நுட்பரீதியான அறிவு இருந்தால் கண்டிப்பாக இத்துறையில் வளரலாம்.
இணையதளங்கள் வாயிலாக எடிட்டிங் பற்றித் தெரிந்துகொள்ள முடியுமா?
கண்டிப்பாக முடியும். எடிட்டிங் மென்பொருளில் Avid கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதன் இணையதளத்திலேயே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. FCP (Final Cut Pro) கற்றுக்கொள்ள அதன் இணையதளத்திலேயே நிறைய டுடோரியல் (tutorial) இருக்கிறது. அதே நேரத்தில், இந்த பட்டனைத் தட்டினால் இப்படி நடக்கும் என்பது மட்டுமே இணையத்திலிருக்கும். அதை ஞாபகம் வைத்து படத்தை எடிட்செய்யும்போது எப்போது சரியாகச் செயல்படுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய தனித்துவம் வெளிப்படும்.
எடிட்டிங் கற்றுக்கொண்டு சினிமாத்துறைக்குள் நுழைவது எப்படி?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மொத்தமே 10- 15 எடிட்டர்கள்தான் முழுக்க முழுக்க எல்லாத் திரைப்படங்களிலும் வேலைசெய்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் 5 உதவி எடிட்டர்கள் என வைத்துக் கொண்டாலும் 50-75 பேருக்கு மேல் வாய்ப்பிருக்காது. ஒரு எடிட்டரிடம் பணிபுரிந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வெளியே வருவதற்கு 3 - 5 வருடங்கள் ஆகலாம்.
நான் உதவியாளர்களைத் தேர்வுசெய்யும்போது, அவர்கள் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது உருவாக்கிய படத்தை முதலில் பார்ப்பேன். அவர்களுடைய படைப்பு பிடித்திருந்தால் என்ன படித்திருக்கிறார்கள், மென்பொருள்ரீதியில் என்ன தெரியும் உள்ளிட்டவற்றைக் கேட்பேன். பிறகு 3 மாதங்கள் என்னுடன் வேலைபார்க்கச் சொல்வேன். அப்போது அவர்களுடைய திறனைக் கண்டறிந்து என்னுடனே பணிபுரியச் சொல்லிவிடுவேன்.
எடிட்டிங்கில் சம்பளம் என்பது எப்படியுள்ளது?
டிஜிட்டல் மயம் ஆனவுடன் எடிட்டரின் பணி பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஏனென்றால், தற்போது படம் சம்பந்தப்பட்ட டப்பிங், பின்னணி இசை, கிராபிக்ஸ் என அனைத்துப் பணிகளிலும் எடிட்டரின் வேலை கூடிவிட்டது. முன்பெல்லாம் கடைசியில்தான் எல்லாவற்றையும் எடிட்டர் ஒருங்கிணைப்பார்.
ஆனால், இப்போது ஆரம்பத்திலும் மீண்டும் இறுதியிலும் டப்பிங், பின்னணி இசை, கிராபிக்ஸ் என அனைத்தையும் படத்துடன் கட் செய்ய வேண்டும். ஆகையால் 30% முதல் 40%வரை பணிகள் அதிகமாகியுள்ளன. அதற்கு ஏற்றாற்போல் இன்னும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பேன்.
எந்த மென்பொருள் தெரிந்திருப்பது முக்கியம்?
பெரும்பாலும் AVID, FCP உபயோகப்படுத்துகிறோம். இதில் AVIDதான் முதன்மை. AVID மென்பொருளைப் படத்துக்கு உபயோகிப்பதுபோல் தொலைக்காட்சிக்குப் பயன்படுத்த முடியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு FCP ரொம்ப உதவியாக இருக்கும்.
நான் இத்துறைக்குள் நுழைந்தபோது எடிட்டிங் மென்பொருள் மட்டும் தெரிந்தால்போதும் என்ற நிலையிருந்தது. இப்போது அதைத்தாண்டி Photoshop, After Effects என நிறைய மென்பொருள்கள் வந்துவிட்டன. இவை நாம் திறமைசாலி என்பதை நிரூபிக்கக் கைகொடுக்கும்.
நீங்கள் எப்படி எடிட்டிங் துறையைத் தேர்வு செய்தீர்கள்?
பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் எந்தப் படிப்பில் சேர்வது எனத் தெரியாமல் இருந்தேன். அப்போது அப்பா ஒரு தொலைக்காட்சியில் பணிபுரிந்துவந்தார். “சும்மா ஏன் இருக்க, போய் எடிட்டிங் கத்துக்க” என்றார். அப்படியே, அவர் எப்படி வேலைபார்க்கிறார் என்பதைப் பார்த்துப் பார்த்து எடிட்டிங்கை நானும் கற்றுக்கொண்டேன்.
முதலில் ஏன் கற்றுக் கொள்கிறோம் என்பதே தெரியாமல்தான் படிக்க ஆரம்பித்தேன். அங்கே சென்றவுடன்தான் இது எவ்வளவு சுவாரசியமான துறை என்பது புரிந்தது. ஆர்வமாக இதைக் கற்றுக்கொண்டே தொலைதூரப் படிப்பாகப் பட்டப் படிப்பை முடித்தேன்.
நான்கு வருடங்கள் கழித்து பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்' தொடரை எடிட்செய்ய ஆரம்பித்தேன். அப்போது பாலுமகேந்திரா நிறைய கற்றுக்கொடுத்தார். அதையடுத்து சிங்கப்பூரிலிருந்து தொலைக்காட்சி சேனல் வாய்ப்பு வந்ததால் ஏழாண்டுகள் அங்கு வேலைபார்த்தேன். நடுவில் ‘சென்னை 28’, ‘சரோஜா’ படங்கள் எடிட்டிங் முடித்துவிட்டு மறுபடியும் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். ‘சரோஜா’ படத்துக்கு தமிழக அரசு விருது கொடுத்தவுடன்தான், சினிமாவில் தொடரலாம் என்ற முடிவை எடுத்தேன்.
முக்கிய செய்திகள்
கல்வி
11 hours ago
கல்வி
11 hours ago
கல்வி
16 hours ago
கல்வி
16 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago