நம்புங்கள் உங்களாலும் முடியும்!

By வா.ரவிக்குமார்

உயரம் தாண்டுதலில் சாதனை படைத்த மாரியப்பனைப் போல், முயன்றால் உங்களாலும் சாதிக்க முடியும். இந்த நம்பிக்கையைப் பயிற்சிகளின் மூலமும் வேலைவாய்ப்புகளின் மூலமும் ஏற்படுத்திவருகிறது ‘யூத்4ஜாப்ஸ்’ தன்னார்வ அமைப்பு. கை, கால் செயல்படுவதில் குறைபாடு, காது கேட்காத வாய் பேசமுடியாத குறைபாட்டுடன் இருந்த 11 ஆயிரம் பேருக்குப் பலவிதமான திறன் பயிற்சிகளை அளித்திருக்கிறது இந்த அமைப்பு. இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியில் இருக்கின்றனர் என்கிறார் இதன் நிறுவனர் மீரா ஷெனாய். இந்த அமைப்பில் சமீபத்தில் பயிற்சிபெற்ற மாற்றுத் திறனாளி மணிகண்டன், டெக்மஹிந்திரா நிறுவனத்தில் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஹார்ட்-வேர் இன்ஜினீயராக இருக்கிறார்.

“பெரும் வணிகத் துணிக் கடைகளில் துணியை மடித்துவைக்கும் பணிக்கு ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள், படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு கேஷியராக இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பேச முடியாதவர்கள். ஆனால், திறனில் குறைந்தவர்கள் அல்ல. மாற்றுத் திறனாளிகளின் திறனைப் பயன்படுத்திக்கொள்ளப் பல நிறுவனங்களும் முன்வர வேண்டும்” என்கிறார் சங்கீதா. இவர், மாற்றுத் திறனாளிகளை நிறுவனங்களில் பணியமர்த்தும் பொருட்டு, நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்திவருகிறார்.

எப்படி வித்தியாசப்படுகிறது?

“சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வாழ்வாதாரத்தைக் கொடுப்பதற்காகக் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. இந்தியாவில் 11 மாநிலங்களில் 20 மையங்களில் இது செயல்படுகிறது.

சில அமைப்புகளில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள். சாஃப்ட் ஸ்கில் பயிற்சி மட்டுமே தருவார்கள். இவர்களிலிருந்து எங்களின் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. பெரும்பாலும் நாங்களே மாற்றுத் திறனாளிகளைத் தேடிப் போவோம். அவர்களின் குடும்பத்தோடு ஒருநாள் தங்கியிருந்து, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். நாங்கள் 60 நாட்களுக்கு என்னென்ன பயிற்சிகளை அளிக்கிறோம் என்று சொல்வோம். அவர்களின் முழு ஒப்புதலோடு இந்த சென்டருக்கு வருவார்கள். பயிற்சி நடக்கும் நாட்களில் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் அனைத்தையும் இலவசமாகவே அளிக்கிறோம்.

உடல் குறைபாட்டோடு பிறந்ததால் தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று சமூகம் அவர்கள் மீது திணித்த அவநம்பிக்கையை, பயத்தைப் பலதரப்பட்ட எங்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் மூலம் போக்குகிறோம். கடைசி 15 நாட்களில் இரண்டு விதமான நேர்காணலுக்கு அவர்களைத் தயார்படுத்துவோம். இந்தப் பயிற்சி தன்னம்பிக்கையோடு நேர்காணலைச் சந்திக்க உதவும். வேலை கிடைத்தாலும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர்களைக் கண்காணிப்போம். குறைந்தபட்சம் 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம்வரை அவர்களின் தகுதிக்கு ஏற்ப மாதச் சம்பளம் பெறும் பணியில் இருக்கின்றனர்” என்கிறார் யூத்4ஜாப்ஸின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான உதவித் திட்ட மேலாளர் ஜெய்சபரி பாலாஜி.

2 மாதப் பயிற்சிக்குப் பின்னர் அவரவருக்குப் பொருத்தமான வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நேர்காணலுக்குத் தயார்படுத்துகிறது இந்த அமைப்பு. வேலை கிடைத்த பின்பும் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான செயல்திறன் கலந்தாய்வையும் அளிக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஹைதராபாத், சென்னை, பெங்களூரில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படுகிறது. அதிக வளர்ச்சியும் அதிக மனிதவள ஆற்றலும் தேவைப்படும் துறைகளான ஹாஸ்பிடாலிட்டி, ரீடெயில், பேங்கிங், ஃபைனான்ஸ், பி.பீ.ஓ., ஐ.டி., டிராவல் அண்ட் டூரிஸம் ஹெல்த் ஆகியவற்றிலும் தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. உள்ளூரிலும் அதே மாவட்டத்திலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

தொடக்கப் புள்ளி

இந்த அமைப்பைத் தொடங்கிவைத்து அதன் மூளையாகச் செயல்படுபவர் மீரா ஷெனாய். இந்தியாவிலேயே முன்மாதிரியாக, ஆந்திர மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் திட்டத்தை 2004-ல் தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டவர் இவர். தெற்காசியாவுக்கான உலக வங்கியின் ஆலோசகராகவும் இருந்தவர்.

மீரா ஷெனாய்

இவர் இந்த அமைப்பைத் தொடங்கியதற்கான காரணம் ஒரு ஆய்வு என்கிறார். “இந்தியாவின் மக்கள்தொகையில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு உடல்ரீதியான குறைபாடு இருப்பதாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு தெரியவந்தது. உடலளவிலும் மனதளவிலும் தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்களுக்குத் தகுந்த பயிற்சியையும் ஒரு வாய்ப்பையும் வழங்கினால் அவர்களாலும் பொருளாதாரரீதியாக முன்னேற முடியும் என இந்த அமைப்பைத் தொடங்கினோம்.

1. உடல் குறைபாட்டோடு இருப்பவர்களும் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதைப் புரியவைப்பது.

2. அவர்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி நம்பிக்கை அளிப்பது.

3. சாதாரணமாக இருப்பவர்களின் பணித்திறனுக்கு மாற்றுத் திறனாளிகளின் திறன் எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதை வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குப் புரியவைப்பது.

இந்த மூன்று விதமான சவாலை நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்றார் மீரா ஷெனாய்.

தொடர்புக்கு: 9600830540 , 9751820602 (காலை 9:30 முதல் மாலை 6 வரை அழைக்கலாம் அல்லது எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்)

கூடுதல் விவரங்களுக்கு: >www.youth4jobs.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்