நீங்கள் ஆவலோடும் பதைபதைப்போடும் எதற்காகக் காத்திருந்தீர்களோ, அந்தத் தருணம் இன்னும் சில தினங்களில் வந்துவிடும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள்தாம் அது.
நீங்கள் எதிர்பார்த்திருந்த மதிப்பெண்களுக்கும் வரப்போகும் மதிப்பெண்களுக்கும் இடையில் இருக்கப்போகும் இடைவெளிதான் உங்களுடைய உயர்கல்வியையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப்போகிறதா? அப்படி எந்த அவசியமும் இல்லை என்பதை எடுத்துச்சொல்லும் முயற்சியே இது.
பிளஸ் 2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதை முடிவெடுப்பதற்கு முன்னால் உங்களை நீங்களே உற்றுக் கவனிப்பதற்கான அவகாசம் இது.
அவரவர் விருப்பம், திறமை, வசதி, இன்றைய கல்விச் சூழல் – பணிச் சந்தையின் போக்கு குறித்த விழிப்புணர்வு இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சில கதாபாத்திரங்களின் ஊடாக அலசி ஆராய்வோம் வாருங்கள்.
#1 பிரியா
படிப்பிலும், கலைத் திறனிலும் பிரியா ‘ஆல் ரவுண்டர்’. இயற்பியல்-வேதியியல்-கணிதம் ஆகிய வற்றை உள்ளடக்கிய பிரிவில் பிளஸ் 2-வில் 96 சதவீதம் பெற்றதால் பிரபலப் பொறியியல் கல்லூரி ஒன்றில் கணினி அறிவியலில் கண்ணை மூடிக்கொண்டு சேர்ந்தார்.
நாட்கள் உருண்டோடிய பிறகுதான் தனக்கான படிப்பு இதுவல்ல என்பது பிரியாவுக்குப் புரிந்தது. அதிலும் கட்டிடக்கலை குறித்து நடத்தப்பட்ட ஒரு பயிலரங்கத்தில் கலந்துகொண்டபோதுதான் அத்துறையில் தனக்கு இருக்கும் ஈர்ப்பு புலப்பட்டது.
அனுபவம் சொல்லும் சேதி:
வெவ்வேறு பாடப் பிரிவுகளில் உள்ள அடிப்படைகளைக் கற்பிப்பதற்கான களம்தான் பள்ளி. ஆகையால் உயர் மதிப்பெண் எடுத்தால் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளே உகந்தவை என்ற முடிவுக்கு வருவது நல்லதல்ல.
இயற்பியல்-வேதியியல்-கணிதம் ஆகிய பாடங்களில் நாட்டம் கொண்டவர்களுக்கு முன்னால் பொறியியலுக்கு அப்பால் இருக்கும் இதர உயர்கல்விப் படிப்புகளும் வாய்ப்புகளும்:
அழகியலில் நாட்டம், துல்லியமாக வடிவங்களை உற்றுநோக்கும் திறன், ஒரு சிறிய இடத்தைக்கூடத் திறம்படப் பயன்படுத்தும் ஆற்றல் ஆகியவை உடையவர்களுக்குக் கட்டிடக்கலை பொருத்தமான படிப்பு.
இதைப் படித்தால் நகரத் திட்டமிடல், நகர வடிவமைப்பு, ‘லேண்ட்ஸ்கேப்’ கட்டிடக்கலை, உள் அலங்கார வடிவமைப்பு, தொழிற்சாலை வடிவமைப்பு உள்ளிட்ட பல வாய்ப்புகள் உள்ளன.
தர்க்கரீதியாகச் சிந்திக்கும் திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன், திட்டவட்டமாக எதையும் அணுகும் பார்வை ஆகியவை இயற்பியல் பாடத்தோடு நெருங்கிய தொடர்புடையவை.
இவற்றில் நீங்கள் கில்லாடி என்றால் இயற்பியலில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளைப் படித்து ஜியோ பிசிக்ஸ், கம்ப்யூடேஷனல் பிசிக்ஸ், இகோனோ பிசிக்ஸ், டிஃபன்ஸ், ஏரோஸ்பேஸ், ஹை எனர்ஜி பிசிக்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், பையோ பிசிக்ஸ், நியூகிளியர் பிசிக்ஸ், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் பிரகாசிக்கலாம்.
அதேபோல வேதியியல் படிப்பவர்களுக்காகவும் அனலெடிகல் கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, என்விரான்மெண்டல் கெமிஸ்ட்ரி, ஃபுட் கெமிஸ்ட்ரி, ஃப்ளேவர் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, மெட்டலர்ஜி, சர்ஃபேஸ் கெமிஸ்ட்ரி எனப் பரந்துபட்ட பணிவாய்ப்புகள் உடைய துறைகள் காத்திருக்கின்றன.
பள்ளியில் படித்த கணக்குகளுக்குச் சரியான விடையெழுதி நூற்றுக்கு நூறு குவிக்க முடிந்தது என்பதாலேயே கணிதவியல் மேதை என்று கற்பனை செய்துகொள்வதும் தவறு. பள்ளிக் கணக்கில் சோபிக்கவில்லை என்பதால் அது நமக்குச் சுட்டுப்போட்டாலும் வராது என்று வருந்துவதும் தவறு.
உங்களுக்குப் பகுப்பாய்வுத் திறனும் தர்க்கவியலும் வாய்க்கப்பெற்றால், எண்களை ஆராய்வதில் அபரிமிதமான காதல் இருக்குமேயானால் மிகவும் சிக்கலான கணிதப் புதிர்களுக்கு விடை கண்டு பிடிக் கும் பேராவல் இருக்குமானால் கணிதவியல் பட்டப் படிப்பில் மகிழ்ச்சியாக இணையலாம். இதன்மூலம் ஆக்சு வேரியல் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், வங்கித் துறை, காப்பீட்டு துறை, நிதித் துறை, பங்குச் சந்தை, வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதிக்கலாம்.
#2 ராஜேஷ்
பத்தாம் வகுப்புவரை ராஜேஷ் அறிவியல், கணிதப் பாடங்களில் சுமாராக மதிப்பெண் எடுத்துவந்தான். மறுபுறம் தமிழ் மொழியில் பேசுவதிலும் எழுதுவதிலும் நடப்பு செய்திகளை வாசித்து நண்பர்களோடு அதுகுறித்து விவாதிப்பதிலும் நாட்டம் இருந்துவந்தது. ஆனால், அவனுக்கு ‘படிப்பே வராது’ என்று சக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டான்.
பிளஸ் 1-ல் வணிகவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பதா கலைப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதா என்று குழம்பினான். தனக்குக் கலைத் துறையில் ஆர்வம் இருந்தும் ஏனோ வணிகவியலைத் தன்னுடைய நண்பர்கள் தேர்ந்தெடுக்கவே, அவனும் தேர்ந்தெடுத்தான். அதைத் தொடர்ந்து சம்பிரதாயமான பட்டப் படிப்பாக ஏதோ ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறான்.
அனுபவம் சொல்லும் சேதி:
அறிவியலும் கணிதமும் வந்தால் மட்டுமே அறிவாளிகள் என்ற தட்டையான புரிதல் பலரின் எதிர்காலத்தைச் சூனியமாக்கிவிடுகிறது.
மொழி ஆளுமையும் கலை ஆர்வமும் உள்ளவர்கள் அநேகத் துறைகளுக்குத் தேவைப்படுகிறார்கள். தங்களுடைய தனித்தன்மையைப் புரிந்துகொண்டு தன்னிச்சையாக முடிவெடுத்தால், அவர்கள் பிரகாசிக்கக்கூடிய துறைகளில் சில:
மொழியில் ஆர்வம் கொண்டவர்கள் மொழியியல் துறைகளைத் தேர்ந்தெடுப்பது சகஜம். அதுபோக, சிறப்பாக எழுதவும் பேசவும் முடிந்தால், படைப்பாற்றலுடன் புதிய சிந்தனைகளை முன்வைக்க முடிந்தால், உலக நிலவரங்களை அலசி ஆராயும் திறன் இருக்குமேயானால் இதழியல், சட்டப் படிப்பு, ஊடகவியல், வெகுஜனத் தொடர்பியல், விஷுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளைத் தாராளமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
செய்தித்தாள் - தொலைக்காட்சி நிருபர், செய்தி ஆசிரியர் ஆகலாம். சட்டப் படிப்புக்குப் புத்திசாதுர்யத்துடன் தர்க்கரீதியாக ஒவ்வொன்றையும் அலசும் திறனும் இக்கட்டான சூழலைச் சமயோசிதப் புத்தியுடன் கையாளும் ஆற்றலும் அவசியம். இன்றைய சூழலில் இதைப் படிப்பவர்களுக்கு நீதிமன்றத்தில் மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கேள்வி கேட்போமா?
பிரியா, ராஜேஷைப் போல உங்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கதை, பல அனுபவங்கள் இருக்கும். அவற்றை நிதானமாகத் திரும்பிப் பாருங்கள். உயர்கல்வி என்ற பரந்துவிரிந்த பரப்புக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால், ‘நான் இதைத்தான் படிக்க விரும்புகிறேனா?’, ‘இந்தப் பாடம் குறித்து நான் எவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறேன்?’, ‘இந்தப் படிப்புக்குரிய பணிவாய்ப்புகளும் சம்பள நிலவரமும் என்ன?’, ‘என்னுடைய கனவுப் பணிவாழ்க்கைக்கு இந்தப் படிப்பு இட்டுச்செல்லுமா?’, ‘ஏற்கெனவே இதைப் படித்துவருபவர்களுடன் கலந்துரையாடிவிட்டேனா?’, ‘இந்தப் படிப்பை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?’, ‘இதற்குச் செலவழிக்க வேண்டிய கல்விக் கட்டணம் எவ்வளவு?’ என்பன போன்ற கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.
“சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன் என்ற முடிவுக்கு வந்த எல்லா விஷயங்களுக்கு முன்பாகவும் ஒரு கேள்விக்குறியை நான் அவ்வப்போது தொங்கவிடுவது உண்டு” என்றார் தத்துவ அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.
நீங்களும் இப்போதே உங்களுடைய உயர்கல்வி குறித்தும் எதிர்காலம் குறித்தும் இடையிட்டுச் சில கேள்விகளை எழுப்பி அலசி ஆராய்ந்து அதன் வழியாக உங்களை அறிந்துகொள்ளுங்கள். ‘நாளை நமதே!’ என்று உரக்கச் சொல்லுங்கள்.
தொடர்புக்கு:
susithra.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
12 days ago
கல்வி
13 days ago
கல்வி
13 days ago