எட்டாம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வின் விடைத்தாளைத் திருத்தி மாணவர்களிடம் விநியோகித்தேன். விடைத்தாள் கொடுத்தபின் பசங்களா, "தேர்வுக்கு முன் வினாத்தாளை வாசிக்க 10 நிமிடங்களைக் கூடுதலாக ஒதுக்கியிருக்காங்க. அப்ப நிதானமா வாசிச்சுப் புரிஞ்சுக்கிட்டா தேர்வு எழுத எளிமையா இருக்கும்.
வினாத்தாளில் கொடுத்திருக்கும் விதிமுறைகளையும் வாசிக்கணும். பதற்றத்தில் கேள்வியைத் தவறாகப் புரிஞ்சுகிட்டா பதில் தப்பாயிடும். ஏற்கெனவே ‘சிறு சேமிப்பு’ குறித்த கட்டுரையை ‘மழைநீர் சேமிப்பு’ என்று புரிஞ்சுகிட்டுப் பலர் எழுதியது நினைவிருக்கா!" என்று கேட்டேன். வகுப்பறை மெல்லிய சிரிப்பால் நிரம்பியது.
பேச்சு மெதுவாகத் தேர்வறை குறித்துத் திரும்பியது. தேர்வறைக்குள் கடுமையான இறுக்கம் எப்போதும் நிரம்பியிருக்கும். தேர்வறைக் கண்காணிப்பாளரின் முகம் இறுக்கமாவே இருக்கும். அவர் நிறையக் கட்டளைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார். தேர்வு நேரம் முடிவை நெருங்கும்போது பதற்றம் அதிகரிக்கும். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது யாராவது அறைக்குள் நுழைந்தாலோ அருகில் நின்றாலோ மனசு படபடக்கும்.
இயற்கை அழைப்புகள் வந்துவிட்டால் அடக்கிக்கொள்ள வேண்டும். பலகாலம் நம்மை மிரட்டிக்கொண்டே இருந்த தேர்வுகள் எப்போது முடியும் என்பதே எண்ணமாக இருக்கும். என்று தேர்வு குறித்த பயத்தையும் வெறுப்பையுமே அனைவரும் வெளிப்படுத்தினர்.
கொண்டாட்டமான தேர்வு முறையைக் கண்டுபிடிக்கவே இயலாதா? கல்வியில் எத்தனைவிதமான மாற்றங்கள் வந்தாலும் தேர்வு ஒன்றே காலங்காலமாக மாறாததாக இருக்கிறது.
கொண்டாட்டமான தேர்வறை
பொதுத் தேர்வு என்று பல்வேறு அறிவுரைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். உண்மையில் தேர்வு அறைக்குள் இருப்பதைவிட வெளியே சொல்லப்படும் நெறிமுறைகளே குழந்தைகள் மனத்தில் தேர்வு குறித்த மாபெரும் பயத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. தேர்வு குறித்த இறுக்கத்தைக் குறைக்கும் வகையில் ஒரு படத்தைத் திரையிடலாம் என்று தோன்றியது.
உலகப் புகழ் பெற்ற மிஸ்டர் பீன் தேர்வு எழுதும் ‘தி எக்ஸாம்’ (The Exam) குறும்படத்தைத் திரையிட்டேன். அவருக்குப் பிடித்த பொம்மைகள், ஏராளமான எழுதுபொருட்கள் என்று பலத்த தயாரிப்புடன் தேர்வு அறைக்குள் இருக்கிறார் பீன். வினாத்தாளை வாசிப்பதில் தொடங்கி விடையைப் பார்த்து எழுத முயல்வது, தேர்வு முடியப் போகும் நேரத்தில்தான் இன்னொரு வினாத்தாளும் இருப்பதை அறிந்து துடிப்பது என பீனின் வழக்கமான பதற்றம் அனைவரையும் தன்னை மறந்து சிரிக்க வைத்தது.
தேர்வர்கள் என்ன குற்றவாளிகளா?
படம் முடிந்ததும் தாங்களும் தேர்வறைக்குள் மற்றவரைப் பார்த்து எழுத மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றிச் சிலர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கேட்டு அனைவரும் சிரித்தோம்.
தேர்வு எழுதும் அனைவரும் மாபெரும் குற்றவாளிகள் என்பது போன்ற மனநிலையில் ஆசிரியரும் தேர்வு ஒன்றே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்ற அழுத்தத்தில் குழந்தைகளும் தேர்வறைக்குள் இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் பேசிக்கொள்ளும் அளவு பள்ளிப் பொதுத் தேர்வுகளில் தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை. அப்படியே சில முயற்சிகள் நிகழ்ந்தாலும் அவை குழந்தைத் தனமானவை. முதல் தேர்வன்று கண்காணிப்பாளர்கள் நடந்துகொள்வதைப் பொறுத்தே எல்லாத் தேர்வுகளும் சுமுகமாகும்.
பொதுத் தேர்வுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘பப்ளிக் எக்சாம்’, அதுவே உன் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். என்று பள்ளியிலும் வீட்டிலும் சுற்றத்திலும் சொல்லிச் சொல்லியே மாணவர்களுக்குத் தேர்வு குறித்த பயமூட்டி வளர்த்திருக்கிறோம். அவற்றையெல்லாம் நீக்கி எவ்விதமான பயமும் தடைகளும் இல்லாமல் இயல்பாகத் தேர்வை எழுதவைப்பது தேர்வு அறைக் கண்காணிப்பாளரின் செயல்களிலேயே இருக்கிறது.
சிரித்த முகத்துடன் இருக்கும் தேர்வறைக் கண்காணிப்பாளரைப் பார்த்தால் மாணவர்கள் மென்மையாகி மலர்ந்துவிடுவார்கள். அவர்கள்தாமே வருங்காலத் தூண்கள்!
- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
12 days ago
கல்வி
13 days ago
கல்வி
13 days ago